×

அரச்சலூர் மலையடிவார பகுதியில் ஆட்டுக்குட்டியை இழுத்து சென்ற மர்ம விலங்கு

*கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி

மொடக்குறிச்சி : ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (59). இவர் சொந்தமாக லாரிகள் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு அரச்சலூர் அருகே ஓம் சக்தி நகரில் 13 ஏக்கர் தோட்டம் உள்ளது. நாகமலை அடிவாரத்தில் தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இதனை ஒரு குடும்பத்தினர் அங்கேயே தங்கி ஆடு மாடுகளை பராமரித்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி அதிகாலை வழக்கம்போல மாட்டு கொட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த 9 மாத கன்றுக்குட்டி காணாமல் போயிருந்தது.

கன்றுக்குட்டியை மர்ம விலங்கு இழுத்து சென்ற கால்தடம் தெரிந்தது. இது குறித்து அரச்சலூர் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு வனச்சரகர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு வந்து மர்ம விலங்கின் கால் தடத்தை பதிவு செய்தனர். மேலும் அதனை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அதேபோல மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 10-க்கும் மேற்பட்ட கேமராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஈரோடு வனத்துறை சார்பில் நாகமலையில் தீர்த்த குமாரசாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தப்பட்டது.

அட்டவணை அனுமன்பள்ளி அருகே வெள்ளிவலசு பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி (50) என்பவரின் தோட்டம் நாகமலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு 3 ஆடுகள், 3 குட்டிகள் என மொத்தம் 6 ஆடுகளை வளர்த்து வருகிறார்.நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது ஆடு ஒன்று காணாமல் போனது தெரிய வந்தது. பின்னர் தேடிப்பார்த்த போது ஆட்டு கொட்டகையின் அருகில் ரத்தம் சிந்தி இருந்தது தெரிந்தது. மர்ம விலங்கு ஆட்டை இழுத்து சென்றதற்கான கால் தடமும் இருந்தது.

இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடத்தை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெள்ளிவலசு சுற்றுவட்டார பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்டறிய சிசிடிவி கேமராக்கள், கூண்டுகள் வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post அரச்சலூர் மலையடிவார பகுதியில் ஆட்டுக்குட்டியை இழுத்து சென்ற மர்ம விலங்கு appeared first on Dinakaran.

Tags : Arachalur ,Forest Department ,Sanmuksundaram ,Anakal Camp ,Erode ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!