×

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பெண் மருத்துவருக்கு தொல்லை: சீனியர் டாக்டர் கைது

 

நாகர்கோவில்,அக்.23: நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு தொல்லை கொடுத்ததாக சீனியர் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 300 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக இருந்து வருகிறார்கள் தினமும் ஏராளமான நோயாளிகள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

இந்த மருத்துவக் கல்லூரியின் உறைவிட மருத்துவ அலுவலராக (பொறுப்பு) இருப்பவர் டாக்டர் ஆண்டனி சுரேஷ் சிங் (52). இவர் இங்கு பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவருக்கு, தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் வருகை பதிவேட்டில் கையொப்பமிட நிர்வாக அலுவலகம் செல்லும்போது பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டதுடன் மிரட்டல் விடுப்பதுமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டார். இதன் பேரில் நேற்று காலை கோட்டார் போலீசார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் டாக்டரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பயிற்சி பெண் டாக்டர்கள், மாணவிகள் சிலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது .

இந்த விசாரணையின் அடிப்படையில் நேற்று மாலை டாக்டர் ஆண்டனி சுரேஷ் சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354 (A), 354(D), 509, 506 (i) மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட டாக்டர் ஆண்டனி சுரேஷ் சிங், நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அனந்த நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

The post நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பெண் மருத்துவருக்கு தொல்லை: சீனியர் டாக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagercoil Government Ayurvedic Medical College ,Nagercoil ,Nagercoil Ayurvedic Medical College Hospital ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் ஒழுகினசேரி, புத்தேரி...