×

ஆயுதபூஜை தொடர் விடுமுறை பஸ்கள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

 

திருப்பூர், அக்.23: ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு பஸ்கள்,ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஆயுதபூஜை மற்றும் நாளை சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின் காரணமாக தொடர் விடுமுறை என்பதால் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் போக்குவரத்து கழகம் சார்பில், திருப்பூரில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து சிவகாசி, மதுரை, தேனி, சிவகங்கை,திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில், செங்கோட்டை,சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுபோல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி,தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸ்களும், திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 30 பஸ்களும் இயக்கப்படுகிறது.

சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் விடுமுறையையொட்டி திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றதால் ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

The post ஆயுதபூஜை தொடர் விடுமுறை பஸ்கள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ayudha ,Puja ,series ,Tirupur ,Ayuda Puja ,Dinakaran ,
× RELATED அரியலூர் பெரியநாயகி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை