×

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 38,235 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் காசநோய் பாதிக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 38,235 நபர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது. காசநோய் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம், தொடர் விழிப்புணர்வு என அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் காசநோய் பாதிக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு காசநோய் தடுப்பு பிரிவு பல தன்னார்வலர் அமைப்பு கொண்டு ஊட்டச்சத்து குறைவாக உள்ள காசநோயாளிகளுக்கு இலவசமாக ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 20,235 தன்னார்வலர்களை கொண்டு உணவு பெட்டகம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது வரை தமிழகத்தில் 38,235 நபர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக காசநோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காசநோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: காசநோய் கண்டறியும் நேரத்தில், அவர்களின் உயரம், எடை மற்றும் உடல் நிறை குறியீட்டெண் மற்றும் சுவாச விகிதம் அளவிடப்படுகிறது. இந்த சோதனை மூலம், கடுமையாக நோய்வாய்ப்பட்ட மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நோயாளிகளை நாங்கள் அடையாளம் காண்கிறோம். அத்தகைய நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கிறோம், அங்கு பயற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சில அரசு மருத்துவமனைகளின் தலைமை செவிலியர்களுக்கு ஸ்பூன் ஃபீடிங் மூலம் உணவை விழுங்க முடியாத நோயாளிகளுக்கு அரிசிப் பொடி, பால் மற்றும் நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஃபார்முலா அடிப்படையிலான உணவை வழங்க பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு களப் பணியாளர்கள் நோயாளிகளை அவர்களது வீடுகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளான வேர்க்கடலை, கடலைப்பருப்பு மற்றும் முட்டை அடங்கிய உணவு பெட்டகத்தை அளிக்க பரிந்துரைக்கிறோம். சிலர் புரோட்டீன் பவுடரையும் வழங்குகிறார்கள்.
காசநோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளில் சுமார் 25 முதல் 30 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகள். எனவே, நாங்கள் அனைவருக்கும் புரதம் நிறைந்த உணவில் கவனம் செலுத்துகிறோம். இது போன்று நடவடிக்கை எடுப்பதால் இறப்பு எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 38,235 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...