×

போர் தீவிரம் அடைகிறது சிரியா, லெபனான் மீது குண்டு வீச்சு: இஸ்ரேலின் அதிரடி தாக்குதலால் பதற்றம்

 

ரபா: காசா மட்டுமின்றி பாலஸ்தீனத்தின் மேற்கு கரை, அண்டை நாடுகளான சிரியா, லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் சட்டவிரோதமாக புகுந்து தாக்குதல் நடத்தி, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதில் இருந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் மூண்டுள்ளது. 16வது நாளாக நேற்றும் போர் நீண்டுள்ள நிலையில், இதுவரை காசாவில் பலியானோர் எண்ணிக்கை 4,651 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,823 பேர் குழந்தைகள். 14,245 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. போர் தொடங்கி 2 வாரத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் எகிப்து எல்லையிலிருந்து ரபா கிராசிங் பாயிண்ட் வழியாக 20 லாரிகளில் காசாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில், இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்துவதாக அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு காசா சிட்டி, ரபா உள்ளிட்ட பல பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 117 குழந்தைகள் உட்பட 266 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்ரேல், பாலஸ்தீன கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதியிலும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள ஜெனின் மசூதியை ஹமாஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய இஸ்லாமிய போராளிகள் பதுங்குமிடமாக பயன்படுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறியது. இதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மசூதியில் 2 பெரிய துளைகள் ஏற்பட்டுள்ளன. அங்கு போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா, டிரோன் ஏவப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே கடந்த 7ம் தேதிக்குப் பிறகு மேற்கு கரையில் பாலஸ்தீன மக்களின் போராட்டம் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தின் அடக்குமுறையால் தினசரி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போதைய வான்வழி தாக்குதல் மேற்கு கரையில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுமட்டுமின்றி, அண்டை நாடான சிரியாவின் டமாஸ்கஸ் விமான நிலையம் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் ஒருவர் கொல்லப்பட்டதாக சிரியா அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மற்றொரு அண்டை நாடான லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் துப்பாக்கி சண்டைகள் நடந்துள்ளன. இதனால் ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மேலும் பல பகுதிகளில் விரிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, காசாவிற்குள் தரை வழியாக படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருகிறது. அவர்கள் நேற்று மீண்டும் வடக்கு காசாவில் உள்ள மக்களுக்கு வான்வழியாக துண்டுபிரசுரங்களை வீசி எச்சரிக்கை விடுத்தனர். ஏற்கனவே இப்பகுதியிலிருந்து 7 லட்சம் பேர் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர்.

தற்போது எஞ்சியுள்ள பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்துவது நடக்காத காரியம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இனியும் வடக்கில் தங்கியிருப்பவர்கள் தீவிரவாதிகளாகவும், தீவிரவாதத்திற்கு துணை போகிறவர்களாகவும் கருதப்படுவார்கள் என இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. காசா எல்லையில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் ராணுவத்தினரை நேற்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்து பேசி உள்ளார். வடக்கு காசாவில் ஹமாஸ் படையினர் பல சுரங்க பதுங்குமிடங்களை அமைத்துள்ளனர். அதன் மூலமாக உயிர் தப்பி வரும் அவர்கள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால் பதிலடி தரவும் தயாராக உள்ளனர். மேலும், நேற்றும் இஸ்ரேல் நோக்கி பல நூறு ராக்கெட்களை ஹமாஸ் படையினர் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. ஹமாஸ் ஏவியதில் 500 ராக்கெட்டுகள் வழிதவறி காசாவிலேயே விழுந்ததாகவும் பல நூறு சொந்த நாட்டு மக்களையே ஹமாஸ் கொன்றிருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.

* 130 குறைமாத குழந்தைகள் உயிருக்கு ஆபத்து

காசா பகுதி முழுவதும் முற்றுகையிடப்பட்டுள்ளதால், அங்கு தினசரி குறைந்தபட்சம் 100 லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்ப வேண்டுமென ஐநா மனிதாபிமான அமைப்பு ஓசிஎச்ஏ வலியுறுத்தி உள்ளது. மருத்துவமனைகளில் மருந்து, மருத்துவ உபகரணங்கள், கிருமிநாசினிகள் பற்றாக்குறை இருப்பதாக கூறி உள்ளது. அசுத்தமான குடிநீரை மக்கள் குடித்து வருவதால் பல நோய்கள் தொற்றும் அபாயம் இருக்கிறது. மேலும் எரிபொருள் இல்லாததால் வென்டிலேட்டர்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும், அதனால் 130 குறைமாதக் குழந்தைகள் உயிர் ஊசலாடுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

The post போர் தீவிரம் அடைகிறது சிரியா, லெபனான் மீது குண்டு வீச்சு: இஸ்ரேலின் அதிரடி தாக்குதலால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : SYRIA ,LEBANON ,ISRAEL ,Raba ,Gaza ,West Bank of Palestine ,Attack ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்