×

தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்: பூ, பழங்கள் விலை கடும் உயர்வு

* சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

சென்னை: ஆயுத பூஜையொட்டி இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் நேற்று கூட்டம் அலைமோதியது. மேலும் பூ, பழங்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். தொடர் விடுமுறையால் சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற ெபாருட்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினமே பூஜை பொருட்களை வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இறுதி நாளான நேற்று தமிழகம் முழுவதும் பஜார் வீதிகள் அனைத்தும் மக்கள் வெள்ளத்தில் திக்கு,முக்காடியது. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் விற்பனை நேற்று களை இருந்தது. பொருட்களை வாங்க ஒவ்வொரும் காலையில் இருந்தே வர தொடங்கினர். இதனால், விற்பனை காலை முதலே களை கட்டி காஒணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் விற்பனை விறுவிறுப்படைந்தது. பஜார் வீதிகள் அனைத்தும் திருவிழா போல கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தூரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

அதே நேரத்தில் ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்கள் விற்பனை கிடு, கிடுவென உயர்ந்து காணப்பட்டது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஆப்பிள்(1 கிலோ) கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையும், மாதுளை, ஆரஞ்ச் ரூ.150 முதல் ரூ.200 வரையும், சாத்துக்குடி ரகத்துக்கு ஏற்றார் போல் கிலோ ரூ.60 முதல் ரூ.150 வரையும், கொய்யா, திராட்சை கிலோ ரூ.100 என்ற அளவில் விற்பனையானது. மஞ்சள் வாழை ஒரு தார் ஒன்று ரூ.300 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் பழங்கள் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகமாக விற்கப்பட்டது. தேங்காய் ரூ.25லிருந்து ரூ.30க்கும் விற்கப்பட்டது. இதே போல, பொரி ஒரு படி ரூ.20, உடைத்த கடலை கிலோ ரூ.100, அவல் சிறிய ரகம் கிலோ ரூ.120, வாழைக்கன்று இரண்டு ரூ.40, மாவிலை தோரணம் இரண்டு ரூ.20, வெள்ளை பூசணி ரூ.30 முதல் ரூ.50 வரை, தென்னை மட்டை தோரணம் இரண்டு ரூ.25, ரூ.30 ஆகவும் விற்கப்பட்டது. கரும்பு கட்டு ரூ.500 என்ற அளவிலும் விற்பனையானது. காய்கறி விலைகளில் மாற்றம் இல்லாமல் பழைய விலைக்கே விற்கப்பட்டது.

பூ விலை கிடு, கிடு உயர்வு: மொத்தவிலையில் சாமந்தி பூ( கிலோ) ரூ.160 முதல் ரூ.180 வரையும், பன்னீர் ரோஸ் ரூ.140 முதல் ரூ.160 வரையும், சாக்குலேட் ரோஸ் ரூ.200 முதல் ரூ.220 வரையும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதே போல் மல்லி, ஐஸ் மல்லி மற்றும் முல்லை கிலோ ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் அரளி பூ ரூ.500க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சில்லரை விற்பனையில் பூ விலை மொத்த விலையை விட ரூ.25 வரை அதிகமாக விற்பனையானது. இதே போல் அனைத்து பூஜை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. விலை அதிகரித்த போதிலும், விலையை பற்றி கவலைப்படாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கினர். ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது, எனினும், கடைசி நேரத்தில் எப்படியாவது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்று முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து ரயில்களில் பயணத்தை தொடர்ந்தனர். அதே நேரத்தில் பஸ்களில் செல்பவர்கள் காலை முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிய தொடங்கினர். இதே ேபால் பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கூடுதலாக 651 பஸ்கள் இயக்கம்: சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு ஒரு நாளைக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் 651 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் அரசு பஸ்களிலும் நிறைய பயணிகள் பயணம் செய்தனர். இதே போல ஆம்னி பஸ்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இன்றும் அனைத்து பஸ்களும் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் ஆயுதபூஜை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக வருகிற செவ்வாய் கிழமை இதே அளவில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதே போல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள் விடுமுறை தினம் வந்ததால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை அவர்கள் ரயில், பஸ்கள், கார்களில் தங்களது பயணத்தை தொடர்ந்துள்ளனர். சொந்த ஊர்களில் ஆயுத பூஜையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சுமார் 12 லட்சம் பேர் வரை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நேற்று சென்னையின் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இன்று அதை விட மக்கள் கூட்டம் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுற்றுலா தளங்கள் நிரம்பி வழிந்தது: தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதனால், சுற்றுலா தளங்கள் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன. சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடினர். வரும் செவ்வாய்கிழமை முதல் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* பஸ், ரயில் ஹவுஸ்புல்

இன்று ஆயுத பூஜை, நாளை விஜய தசமி விடுமுறை நாள். அதே நேரத்தில் இதற்கு முன் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்த விடுமுறையை பயன்படுத்தி சென்னையில் வசிப்போர் மற்றும் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுமுறைைய கழிக்க சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவே புறப்பட தொடங்கினர். இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ரயில்களில் முன்பதிவில்லா பெட்டியில் நிற்க கூட முடியாத அளவுக்கு நெரிசலில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது. ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் எப்படியாவது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். அதே போல் நேற்றும் தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால், அனைத்து ரயில்களிலும் ஹவுஸ் புல் ஆனது.

The post தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்: பூ, பழங்கள் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Armed Pooja Kolagala ,Chennai ,Armed Pujioti ,Pooja ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...