×

ஏர்போர்ட், ஹெலிபேடுகள் தயார் இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா: பென்டகன் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: கடந்த 2022ம் ஆண்டிலிருந்தே, இந்தியா உடனான அசல் எல்லைக் கோடு பகுதியில் சீனா தனது துருப்புகளை அதிகரிப்பதோடு, விரைவில் படைகளை எல்லைக்கு கொண்டு வர நவீன விமான நிலையம், ஹெலிபேடு உள்ளிட்ட பல உள்கட்டமைப்புகளை அதிகரித்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தனது வருடாந்திர அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2020ம் ஆண்டு ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான அசல் எல்லைக் கோடு (எல்ஏசி) பகுதியில் படைகளை குவிக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுவத்துவதிலும் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக 2022ம் ஆண்டில் சீனா எல்ஏசியில் தனது ராணுவ உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தியது. போர் சமயங்களில் விரைவில் படையை எல்லைப் பகுதிக்கு கொண்டு செல்ல, டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு வசதிகள், எல்ஏசியின் மூன்று பகுதிகளில் புதிய சாலைகள், அண்டை நாடான பூடான் எல்லையை ஒட்டி புதிய கிராமம், பாங்காங் ஏரியின் மீது 2வது பாலம், இரட்டை பயன்பாட்டிற்கான புதிய விமான நிலையம், பல்வேறு ஹெலிபேடுகளை அமைத்துள்ளது.

மேலும், எல்ஏசியின் மேற்கு பகுதியில் 2 புதிய படைப்பிரிவுகளை சீனா நிலை நிறுத்தியது. எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு தரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், கிழக்கு பகுதியில் சில படைகள் வாபஸ் பெறப்பட்டாலும், தொடர்ந்து அங்கும் சீன துருப்புகள் அதிகளவில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* அணு ஆயுதத்தை பெருக்கும் சீனா

சீனாவிடம் தற்போது 500க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், 2030ம் ஆண்டுக்குள் 1,000க்கும் அதிகமாக அணு ஆயுதங்களை அந்நாடு கொண்டிருக்கும் என்றும் பென்டன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவும் வரையில் சீனா உடனான உறவு சாதாரணமாக இருக்க முடியாது என்று இந்தியா கூறி வரும் நிலையில், பென்டகனின் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

The post ஏர்போர்ட், ஹெலிபேடுகள் தயார் இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா: பென்டகன் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : China ,Indian border ,Pentagon ,Washington ,India ,Indian ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா