×

அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டிக்கொலை: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை

சென்னை: வண்டலூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நாட்டு வெடிகுண்டுகள் வீசி, சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி (58). இவருக்கு மனைவி கல்யாணி(52), மகன்கள் அன்புராஜ்(27) அன்பரசு(29) ஆகியோர் உள்ளனர். இதில், ரவி ஏற்கனவே அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். தற்போது, அவரது மனைவி கல்யாணி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். 2வது மகனான அன்பரசு 9வது வார்டு உறுப்பினராகவும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறையின் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். அன்பரசுக்கு ஆர்த்தி (27) என்ற மனைவியும் மகள்கள் லித்திஷா (4), ஜனா (2) ஆகியோர் உள்ளனர். அன்பரசு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

இந்நிலையில், கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் (எ) தனசேகர் என்பவரின் 2வது மகன் நவீன்குமார் என்பவரின் மறைவையொட்டி படத்திறப்பு விழாவிற்காக அன்பரசு உட்பட அவரது நண்பர்கள் 7 பேர் சென்றுவிட்டு அங்குள்ள சுடுகாட்டு வாசலில் அமர்ந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மது அருந்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் அன்பரசு எடுத்து வந்த கார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது. இதனை கண்டதும் மது அருந்திக் கொண்டிருந்த 7 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில், ரவுடி கும்பல் கையில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் அன்பரசை ஓட ஓட விரட்டி சென்று இரண்டு கை, கால்கள், கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரமரியாக வெட்டிச் சாய்த்தது. அன்பரசு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். அவரது கை விரல்கள் மற்றும் கழுத்து பகுதி ஆகியவை துண்டாகி தொங்கியது. அன்பரசு உயிரிழந்ததை உறுதி செய்த அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் எஸ்.பி.சுதாகர் (செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் பொறுப்பு) மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்பரசுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்குப் பதிவு செய்து அன்பரசை கொலை செய்தது யார், எதற்காக அவரை கொலை செய்தார்கள், ரியல் எஸ்டேட் போட்டியா, முன்விரோதமா என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ரவுடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், ஊத்துக்குழி, ஒத்திவாக்கம் மற்றும் தாம்பரம் அடுத்த சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை பிடித்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு அன்பரசுக்கு போனில் ஒரு ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

* சாலை மறியல்

அன்பரசு கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையான கண்டிகை கூட்ரோட்டில் சாலை மறியல் செய்வதற்காக பலர் திரண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் சாலை மறியல் செய்ய முடியாததால் அனைவரும் அவரவர் வாகனங்களில் சென்று ரத்தினமங்கலம் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை அன்பரசனின் உடலை வாங்க மாட்டோம் என கூறி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசுக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அன்பரசுவின் தந்தை ரவி கூறுகையில், ‘‘என் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாழம்பூர் போலீசில் புகார் செய்தோம். ஆனால் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியாமல் சாதாரண வழக்காக பதிவு செய்து வெளியே விட்டு விட்டனர். என் மகன் சாவுக்கு போலீஸ்தான் காரணம்’’ என ஆவேசமாக கூறினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்துசென்றனர். இதனை அடுத்து மதியம் ஒரு மணி அளவில் அன்பரசனின் உடலை வாங்கி சென்ற அவரது உறவினர்கள் நேற்று மாலை 6 மணிக்குமேல் அடக்கம் செய்தனர்.

The post அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டிக்கொலை: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை appeared first on Dinakaran.

Tags : AIADMK panchayat president ,Chennai ,AIADMK Panchayat Council ,President ,Vandalur ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...