×

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளர்களின் விவரங்கள் மாதம்தோறும் ஆய்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளர்களின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும், என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்தன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வங்கிகள் மூலமாக பணம் வழங்குவது என்பது முடியாத காரியம். ஒரே நேரத்தில் வங்கிகள் மூலமாக பணம் அனுப்பினால் தொழில்நுட்ப கோளாறுகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. இது போன்ற குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. முதல்கட்டமாக விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் மற்றும் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கையேடு வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் அடையாளமாக சில பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதேபோல மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொங்கி வைத்தனர். அதன்படி, தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் மாதம்தோறும் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தகுதியான பயனாளர்களை உறுதி செய்யும் வகையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளர்களின் தரவுகள் மாதம்தோறும் ஆய்வு செய்யப்படும், என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில், தகுதிவாய்ந்த 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இறப்பு தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்யப்படும். அதேபோல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதிய தொடர்பான தகவல்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய தரவுகள், வருமான சான்று தொடர்பான தகவல்கள், 4 சக்கர மற்றும் கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

காலாண்டுக்கு ஒருமுறை பொது விநியோக திட்டம் தொடர்பான தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உடமை தொடர்பான தகவல்கள், அரையாண்டுக்கு ஒருமுறை தொழில்வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின்சார பயன்பாட்டு தரவுகள் ஆகியவற்றை சரிபார்க்கப்படும். இதேபோல், வருமான வரி செலுத்தப்பட்ட மற்றும் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள், சொத்து வரி குறித்த தரவுகளை ஆண்டுதோறும் சரிபார்க்கப்படும். இந்த தகவல்கள் அடங்கிய தரவுகளை பராமரிக்கும் அரசுத்துறைகள் தொழில்நுட்ப தொடர்பு வழியாக நிகழ் நேரத்தில் அல்லது உரிய கால முறையில் தகவல் தரவுகளை கலைஞர் மகளிர் உரிமை திட்ட இணையதளத்திற்கு பகிர்ந்தளிக்க ஆணையிடப்படுகிறது. மேலும், இந்த தகவல்கள் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் தானாக புதுப்பிக்க வேண்டும். தானாக புதுப்பிக்கப்படுதல் மூலமாக நீக்கம் செய்யப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். இதுதொடர்பாக பயனாளிகள் முறையீடு செய்ய விரும்பினால் இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.

சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலை இணையதளம் வழியாக ஒவ்வொரு மாதமும் 2ம் தேதிக்குள் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல், கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சர்பார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இணையவழி முறையீடு

சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இணைய வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று ஒவ்வொரு மாதமும் இணைய தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி, இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், நிராகரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளர்களின் விவரங்கள் மாதம்தோறும் ஆய்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...