×

சாதிவரி கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை: ப.சிதம்பரம் கருத்து

புதுக்கோட்டை: சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை என்று ப.சிதம்பரம் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டி: கொரோனா காலத்தில் 2 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் இருந்தது. இதனால் பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது‌. சாதிவாரி கணக்கு என்பது கண்டிப்பாக தேவை. இதன் மூலம் அரசு வேலைகளில், பள்ளி கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யலாம்.

நாடாளுமன்றத்தில் கூட ஒரு எம்.பி புலிகள், யானைகளை கூட கணக்கீடு செய்யப்படுகிறது என்று வேடிக்கையாக சொன்னார். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்பது கணக்கெடுத்தால் தான் தெரியும். பத்தாண்டுக்கு ஒருமுறை எடுக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பையே ஒன்றிய அரசு எடுக்கவில்லை. இதை 2021லேயே எடுத்திருக்க வேண்டும். நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் எனது கருத்து.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் திமுக ஆரம்ப காலத்தில் இருந்து வைக்கும் கோரிக்கை. தமிழ்நாட்டில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்ட கோரிக்கை இது. நீட் தேர்வு இல்லாமல் தான் புகழ்பெற்ற மருத்துவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். திமுகவினர் கையெழுத்து இயக்கத்தை ஜனநாயக முறைப்படி நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post சாதிவரி கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை: ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Pudukottai ,Pudukottai district ,Kottamangalam ,Alangudi ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...