×

திருவண்ணாமலையில் பயிற்சி பாசறை கூட்டம்; வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை: 8 மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் பேர் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 8 மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கும் திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப்பாசறை கூட்டம், அருணை மருத்துவக்கல்லூரியில் 600 அதிநவீன படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் இல்ல திருமண வரவேற்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கு வந்தார்.

திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அமைச்சர் கே.என்.நேரு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோரும் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் இன்று காலை 10மணியளவில் திமுக சார்பில் வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கத்தில் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறம் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறையில் கலந்து கொண்டார். இதில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். திமுக முன்னணி நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்ற வேண்டிய கடமைகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.

காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், உணவு இடைவேளைக்கு பிறகு 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. பயிற்சிப்பாசறை கூட்டத்தின் நிறைவாக மாலை 4 மணிக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்கு உழைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்பட அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

மேலும், திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 நவீன படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடத்தை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், துணைத்தலைவர் எ.வ.குமரன், மருத்துவ இயக்குநர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, இரவு 7 மணியளவில், திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள கலைஞர் திடலில், திமுக நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சி தலைவர் நிர்மலாவேல்மாறன் ஆகியோரது இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பயிற்சி பாசறையொட்டி சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் தனித்தனியே உணவு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

The post திருவண்ணாமலையில் பயிற்சி பாசறை கூட்டம்; வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை: 8 மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Stalin ,Thiruvannamalai ,Training Phasara ,Dinakaran ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...