×

229 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை நசுக்கியது தென் ஆப்ரிக்கா: யான்சென், கிளாஸன் அமர்க்களம்

மும்பை: ஐசிசி உலக கோப்பை தொடரின் 20வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் மோதிய தென் ஆப்ரிக்கா 229 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்க தொடக்க வீரர்களாக டி காக், ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர். டி காக் 4 ரன் எடுத்து டாப்லி பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட, தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து ஹெண்ட்ரிக்ஸ் – வாண்டெர் டுஸன் இணைந்து அதிரடியாக விளையாட, தென் ஆப்ரிக்கா ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்தது. வாண்டெர் டுஸன் 60 ரன் (61 பந்து, 8 பவுண்டரி) விளாசி ரஷித் சுழலில் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட ஹெண்ட்ரிக்ஸ் 85 ரன் (75 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரசித் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து கேப்டன் மார்க்ரம் – கிளாஸன் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்தனர்.

மார்க்ரம் 42 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, டேவிட் மில்லர் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கிளாஸனுடன் இணைந்து மார்கோ யான்சென் இங்கிலாந்து பந்துவீச்சை பதம் பார்க்க தென் ஆப்ரிக்கா ஸ்கோர் 300 ரன்களைக் கடந்து ராக்கெட் வேகத்தில் பறந்தது. இந்த ஜோடியை அடக்கவும் முடியாமல்… பிரிக்கவும் முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் விழி பிதுங்கினர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த கிளாஸன் 109 ரன் (67 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அட்கின்சன் பந்துவீச்சில் கிளின் போல்டானார். கோட்ஸீ 3 ரன்னில் வெளியேற, தென் ஆப்ரிக்கா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன் குவித்தது.

யான்சென் 75 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்), கேஷவ் மகராஜ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ரீஸ் டாப்லி 3, அட்கின்சன், அடில் ரஷித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 400 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் துரத்தலை தொடங்கிய இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. 15.1 ஓவரிலேயே 84 ரன்னுக்கு 7 விக்கெட், 16.3 ஓவரில் 100 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து பரிதாபமாகப் பரிதவித்த இங்கிலாந்து அணி, அட்கின்சன் – மார்க் வுட் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஓரளவு கவுரமான ஸ்கோரை எட்டியது.

அட்கின்சன் 35 ரன் (21 பந்து, 7 பவுண்டரி) விளாசி மகராஜ் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். டாப்லி காயம் காரணமாக களமிறங்காததால், 22 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. மார்க் வுட் 43 ரன்னுடன் (17 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் கோட்ஸீ 3, என்ஜிடி, யான்சென் தலா 2, ரபாடா, மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கிளாஸன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நடப்பு சாம்பியனை 229 ரன் வித்தியாசத்தில் நசுக்கிய தென் ஆப்ரிக்கா புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது. இந்த படுதோல்வியால் இங்கிலாந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

The post 229 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை நசுக்கியது தென் ஆப்ரிக்கா: யான்சென், கிளாஸன் அமர்க்களம் appeared first on Dinakaran.

Tags : South Africa ,England ,Janssen ,Clausen ,Mumbai ,ICC World Cup ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...