×

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு மலர்வளையம் வைத்து டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி

சென்னை: காவலர் வீர வணக்க நாளையொட்டி சென்னையில் உள்ள நினைவு சின்னத்திற்கு தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மரியாதை செலுத்தினார்.  கடந்த 1959ம் ஆண்டு இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில், இந்தியாவின் 10 மத்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இதனையொட்டி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 21ம் தேதியன்று, காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 188 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாக சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இந்தியா முழுவதும் பணியின் போது இறந்த 188 காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தார். அதேபோல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து நினைவு சின்னத்திற்கு மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் இறந்த காவலர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.

*முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சிக்காக தம் உயிரையும் பணையம் வைத்து நம்மை பாதுகாக்கும் கடமையுணர்வுமிக்க காவல் துறையினரின் தியாகங்களுக்கு காவலர் வீரவணக்க நாளில் எனது வீரவணக்கங்கள்’’ என கூறியுள்ளார்.

The post காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு மலர்வளையம் வைத்து டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : DGP ,Shankar Jiwal ,Guards Day ,Chennai ,Tamil Nadu ,Police Chief ,Police Salute Day ,
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...