×

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் விவகாரம் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு துரை வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: முதுபெரும் அரசியல் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு, மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்திருந்தது. இந்த கோப்பில், கவர்னர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுத்த செய்தி அனைவரின் பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. பல்வேறு தியாகங்களைச் செய்த 101 வயது நிரம்பிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா. அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தகைசால் தமிழர்’ விருது அளித்து பாராட்டியதை நாம் எந்நாளும் மறவோம்.

அத்தகைய தியாக சீலருக்கு, நவம்பர் 2ம் தேதி நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில், கவுரவ டாக்டர் பட்டம் வழங்க காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு முடிவெடுத்துள்ளது. நவம்பர் 3ம்தேதி, சங்கராய்யாவை நேரில் சந்தித்து டாக்டர் பட்டம் வழங்குவது என்றும் பல்கலைக் கழகம் முடிவு செய்தது. தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி இதற்கு எதிராக நடந்துகொள்வது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு ஆகும். இதன் பின்னரும் ஆர்.என்.ரவி தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மாநில அரசோடு நிழல் யுத்தம் செய்யும் போக்கினை தொடர்வது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் விவகாரம் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு துரை வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,Governor RN ,Ravi ,Sankaraiah ,Chennai ,Madhyamik ,General Secretary ,Madurai Kamarasar University ,N. Sankarayya ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...