×

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ககன்யான் முதற்கட்ட சோதனை வெற்றி: வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து பாராசூட் மூலம் வங்கக் கடலில் இறங்கியது, இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்

சென்னை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை திட்டம் வெற்றியடைந்தது. விண்வெளி வீரர்கள் அமரும் பகுதியான ‘க்ரூ மாட்யூல்’ தனியாக பிரிந்து பாராசூட் மூலம் வங்கக் கடலில் இறங்கியது. 3 முறை தாமதம், கடைசி நேர தொழிநுட்ப கோளாறுகளை கடந்து, சோதனை வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலனை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியா விண்வெளிக்கு சொந்தமாக, செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் அனுப்பியிருந்தாலும் மனிதர்களை இதுவரை அனுப்பவில்லை. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். ககன்யான் திட்டத்தின் படி எல்விஎம் மார்க் -3 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் விண்கலனில் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள்.

இந்நிலையில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் மீண்டும் பூமியில் பத்திரமாக தரையிறக்குவதற்கான சோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஆளில்லாமல் விண்கலனை அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இந்த ககன்யான் திட்டத்தில் முதற்கட்ட சோதனையாக ஆட்களை மீட்பதற்கான செயல்முறை சோதனை மற்றும் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் மனிதர்களை எப்படி பத்திரமாக மீட்பது என்பது தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் ககன்யான் திட்டத்தின் முதற் கட்ட சோதனை திட்டமான டிவி-டி1 சோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்த சோதனைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இன்டகிரேடட் ஏர் டிராப் டெஸ்ட் க்ரூ மாடல் மற்றும் ஒற்றை இன்ஜின் கொண்ட ராக்கெட் தயாரிக்கப்பட்டது. இந்த டிவி-டி1 விண்கலம் 35 மீட்டர் உயரமும், 4520 கிலோ எடை கொண்ட 3 பகுதிகள் கொண்டுள்ளது. திரவ எரிபொருள் உந்துவிசையில் இயங்கும் ஒற்றை நிலை ராக்கெட், விண்வெளி வீரர்கள் அமர்ந்து இருக்கும் பகுதியான கிரூ மாட்யூல் மற்றும் வீரர்கள் இருக்கும் பகுதியை எடுத்து செல்லும் கிரூ எஸ்கேப் சிஸ்டம் ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது.

இந்த 3 பகுதிகளில் உள்ள அனைத்து பாகங்களும் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ராக்கெட் ஏவுதலுக்கான கவுன்ட்டவுன் உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து சரியாக காலை 10 மணிக்கு டிவி-டி1 விண்கலம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 60 விநாடிகளில் ஏவுதலுக்கு பயன்படுத்தப்பட்ட ராக்கெட் பிரிந்தது. இதையடுத்து கிரூ எஸ்கேப் சிஸ்டம் பகுதி செயல்பட்டு, விண்வெளி வீரர்கள் இருக்கும் பகுதியான கிரூ மாட்யூலை எடுத்து சென்று சரியாக 90 விநாடிகளில் 17 கி.மீ உயரத்தில் இருந்து கிரூ மாட்யூல் இறக்கிவிடப்பட்டது.

இதையடுத்து 5 விநாடிகளில் முதல் 2 பாரசூட்டுகள் பிரிந்தது. இதையடுத்து கிரூ மாட்யூலின் வேகம் குறைக்கப்பட்டது. மேலும் 5வது நிமிடத்தில் அடுத்த கட்டமாக 3 பாராசூட்டுகளும், இறுதியாக முக்கிய பாராசூட்டுகள் பிரிந்து படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு சரியாக விண்வெளி வீரர்கள் இருக்கும் பகுதி பத்திரமாக வங்கக்கடலில் இறக்கப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 10வது நிமிடத்தில் கிரூ மாட்யூல் கலன் வங்கக்கடலில் இறக்கப்பட்டது. இதையடுத்து 30வது நிமிடத்தில் கிரூ மாட்யூல் கலனை இந்திய கடற்படை கண்டடைந்தது. அதையடுத்து கலனை மீட்டு சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சோதனை வெற்றிபெற்றதை அடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: டிவி-டி1 சோதனை திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ஆடக்ளை பத்திரமாக மீட்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த சோதனையில் விண்கலம் ஒலியின் வேகத்தில் பயணித்து, மனிதர்களை மீட்கும் சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. விண்கலனில் இருந்து கிரூ எஸ்கேப் சிஸ்டம். விண்வெளி வீரர்கள் இருக்கும் பகுதியான கிரூ மாட்யூல் கலனை சரியாக பிரித்தது மேலும் அதனை தொடர்ந்து அனைத்து பணிகளும் சரியாக நிகழ்த்தப்பட்டது.

கிரூ மாட்யூல் கலன் சரியாக தரையிறங்கியது. அதனை தொடர்ந்து கலனை மீட்கும் பணிகள் நடைபெறும். அதை ஆய்வு செய்து அந்த முடிவுகளை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முன்னதாக வானிலை சரியில்லாத காரணங்களுக்காக காலை 8 மணிக்கு பதிலாக 8.45 மணிக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அப்போது ஆட்டோமேட்டிக் லாஞ்சிங் சிகுயென்ஸ், தானியங்கி ஏவுதல் செயல்முறை அமைப்பு, ராக்கெட் பூஸ்டர்களில் இருந்த ஒழுங்கின்மையை கண்டுபிடித்தது. அதனால் ராக்கெட் ஏவுவது உடனடியாக நிறுத்தப்பட்டு ராக்கெட்டில் எரிபொருளை நிரப்பும் பணி மிக துரிதமாக நடத்தப்பட்டு மீண்டும் இந்த சோதனை தொடங்கியது.

இது போல இடர்பாடுகளை உடனடியாக சரி செய்து சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது வருங்கால திட்டங்களை சரியாக செய்ய உதவும். இந்த சோதனை வெற்றியடைய காரணமான ககன்யான் திட்டக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்.இவ்வாறு அவர் கூறினார். அதன் பின்னர் பேசிய டிவி-டி1 சோதனை திட்ட இயக்குனர் சிவகுமார் கூறுகையில், ‘‘இந்த திட்டம் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த திட்டத்தில் 3 வகையான சோதனை கலன்கள் சிறப்பாக செயல்பட்டது. எங்கள் குழுவின் 3 ஆண்டு முயற்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.

அனைத்து கலன்களும் சரியாக செயல்பட்டது. ஆரம்பத்தில் இருந்த சிறிய இடர்பாடு தவிர அனைத்து செயல்முறைகளும் சிறப்பாக செயல்பட்டது’’ என்றார். ககன்யான் திட்ட இயக்குநர் ஹட்டன் கூறுகையில், ‘‘ககன்யான் திட்டத்தில் இது மிக பெரிய மைல்கல். இது மொத்த ககன்யான் திட்டத்திற்கும் உந்து சக்தியாக அமையும், ககன்யான் திட்டத்தில் மனிதர்களை பத்திரமாக மீட்பதே முக்கிமானது. அதை தற்போது செயல்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்தில் புதிய முயற்சியாக திரவ எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. மேலும் 20களில் இருக்கும் இளம் விஞ்ஞானிகள் பலர் இதில் பணியாற்றியுள்ளனர். இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி’’ என்றார்.

இந்த சோதனையை தொடர்ந்து பல்வேறு தரநிலைகளில் இது போன்ற சோதனைகள் நடத்தப்படவுள்ளது. இந்த சோதனைகளுக்கு பின் ஆளில்லா ககன்யான் விண்கலனை விண்வெளிக்கு அனுப்பி சோதனைகள் நடைபெறும் இந்த அனைத்து சோதனைகளும் முடிந்த பின் 2025ம் ஆண்டில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிபெறும் நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும்.

* பிரதமர் மோடி, கார்கே வாழ்த்து
பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், ‘‘இஸ்ரோ தனது ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக சோதனை வாகனத்தை வெற்றிகரமாக ஏவியது. இந்த ஏவுதல் இந்தியாவின் முதல் மனித விண்வெளி விமானத் திட்டமான ககன்யானை நனவாக்குவதற்கு ஒரு படி மேலே செல்கிறது. இஸ்ரோவில் உள்ள நமது விஞ்ஞானிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நாட்டின் மனித விண்வெளிப் பயணத் திட்டம் 2007 முதல் செயல்பாட்டில் உள்ளது. தற்போது அதன் இலக்கை அடைவதை நோக்கி வெற்றிகரமாக நகர்கிறது. ககன்யான் சோதனைப் பயணத்தின் (டிவி-டி1) வெற்றிக்காக இஸ்ரோவில் உள்ள அனைத்து விஞ்ஞானிகள், விண்வெளிப் பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: ககன்யான் டிவி-டி1 சோதனைக்கலன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டமைக்காக இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பயணத்தில் இந்த சாதனை குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இதற்காக அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்த அனைத்து அறிவியலாளர்களுக்கும் எனது பாராட்டுகள் என கூறியுள்ளார்.

* அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளில்லா ககன்யான் திட்டம்
ககன்யான் திட்டத்திற்கு இந்த சோதனை நல்ல முன்னெடுப்பாக அமைந்துள்ளது. மீட்கப்படும் க்ரூ மாட்யூல் கலன் குறித்த தகவல்கள் தொடர்ந்து ஆராயப்படும். இந்த சோதனையின் மூலம் ககன்யான் திட்டத்தின் பயணத்தை தொடங்கியுள்ளோம். இது போன்ற இன்னும் பல சோதனைகளை வேறு வேறு தரநிலைகளில் நடத்த உள்ளோம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

*3 முறை ஒத்திவைப்பு
ககன்யான் திட்டத்தின் டிவி-டி1 சோதனை திட்டம் முன்னதாக காலை 8 மணிக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் வங்கக் கடலில் வானிலை சரியில்லாத காரணம் மற்றும் மேகமூட்டம் காரணமாக 8:30 மணிக்கும், அதன் பின்னர் 8.45 மணிக்கும் சோதனை திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தானியங்கி ராக்கெட் ஏவும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு இறுதி கட்டத்தில் 5 வினாடிகள் இருந்த நிலையில் ராக்கெட் ஏவுதல் செயல்முறை தானாக நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான தானியங்கி செயல்முறை ராக்கெட் ஏவுவதற்கான கட்டளையை கொடுத்தது. இருப்பினும் கடைசி நொடிகளில் ராக்கெட் ஏவுதல் தடைபட்டது.

இதனை செயல்படுத்தும் கணினிகள் கடைசிவரை சரியாக செயல்படாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாகவும், இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். இதையடுத்து திட்டம் நேற்று நிறுத்திவைக்கப்பட்டதாகவே அனைவரும் கருதினர். ஆனால், பின்னர் தொழில்நுட்ப கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டு காலை 10 மணிக்கு சோதனை திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

The post மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ககன்யான் முதற்கட்ட சோதனை வெற்றி: வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து பாராசூட் மூலம் வங்கக் கடலில் இறங்கியது, இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Kaganyan ,Bank Sea ,ISRO ,Chennai ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...