×

நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை; வைகை அணை நீர்மட்டம் 5 நாளில் 5 அடி உயர்வு: பாசன விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது


ஆண்டிபட்டி: தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லாத நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையால், வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 5 அடி உயர்ந்து பாசன விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்துள்ளது. இதனால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இதில் தேக்கப்படும் தண்ணீர் மதுரை, தேனி,‌ திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

இதனால், பாசன விவசாயிகள் கவலை அடைந்தனர். வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழே சரிந்ததால் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் முதல்போக பாசனத்திற்கான தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த 15ம் தேதி 53 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 58.76 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது 5 நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,492 கனஅடி நீர்வரத்து உள்ளது.

அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 69 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் உயருமா, உயராதா என விவசாயிகள் கவலை அடைந்திருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை; வைகை அணை நீர்மட்டம் 5 நாளில் 5 அடி உயர்வு: பாசன விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது appeared first on Dinakaran.

Tags : Waikai dam ,Andipatti ,Vaigai Dam's… ,Vaigai Dam ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்