×

உடல் நலக்குறைவால் காலமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி: கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க மரியாதை


கும்மிடிப்பூண்டி: உடல் நலக்குறைவால் காலமான திமுக முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணு உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 1989 மற்றும் 1996ம் ஆண்டுகளில் 2 முறை திமுக எம்எல்ஏவாக பணியாற்றியவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு. இவரது சொந்த ஊர், கும்மிடிப்பூண்டி அருகே பண்பாக்கம் கிராமம். கடந்த சில ஆண்டுகளாக கி.வேணு, உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதற்கு பிறகு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்பட்டது.

இந்நிலையில், மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் கி.வேணு மரணமடைந்தார். அவருக்கு வயது 74. அவரது உடல் சென்னையில் இருந்து பண்பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. இந்த தகவலை கேள்விபட்டதும் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் நேரில் சென்று கி.வேணு உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைச்சர் காந்தி, எம்பிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் நாசர், டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினர். மறைந்த கி.வேணு, திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்.

தனக்கென தனி அரசியல் பாணியை பின்பற்றி முத்திரை பதித்தவர். திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும் செயலாற்றி வந்தார். கட்சி வளர்ச்சிக்கு முழுமையாக செயல்பட்டவர். கடந்த 1975ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு திமுகவின் முன்னணி தலைவர்களுடன் ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தவர். திமுகவின் பல்வேறு போராட்டங்களை வழிநடத்தி பலமுறை சிறை சென்றவர். தனது பெயருக்கு முன்னால் சொந்த ஊரான கும்மிடிப்பூண்டி என அடைமொழியாக இணைத்து கொண்டு, தனது சொந்த ஊருக்கு பெருமை சேர்த்தவர்.

கும்மிடிப்பூண்டி கி.வேணு என திமுக உள்பட மாற்று கட்சியினரிடையே பிரபலமாக விளங்கியவர். கடந்த 2021ம் ஆண்டுக்கான முப்பெரும் விழாவில், திமுக தலைமை கழகம் சார்பில் இவருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் பண்பாக்கம் கிராமத்தில் கி.வேணுவின் உடல் தகனம் செய்யப்படுகிறது. இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், செந்தில்குமார், ஆனந்தகுமார் என்ற மகன்களும், உமா மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் செந்தில்குமார் இறந்து விட்டார். ஆனந்தகுமார், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், உமா மகேஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவியாகவும் இருந்து வருகிறார்.

அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர்; முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்நாட்டின் வட எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தை கட்டி காத்த தீரர் அருமை சகோதரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயர செய்தி கேட்டு துடிதுடித்து போனேன். எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர் அவர். இந்திய வரலாற்றின் கருப்பு பக்கமான மிசாவை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சிறை ஏகிய போராளி. மிசா சிறைவாசத்தில் என்னோடும், கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டு கலைஞருடன் சிறையில் வாடியவர். கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான் என்று சொல்லுமளவுக்கு, அந்த தொகுதி மக்களிடமும் ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட மக்களிடமும் அன்பு காட்டி நற்பெயர் பெற்ற அவரை இன்று இழந்து தவிக்கிறோம் என்று எண்ணுகையில் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

கழகத்தின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து, ஒன்றிய செயலாளராக, மாவட்ட செயலாளராக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக என முத்திரை பதித்த அவரது உழைப்பும் தியாகமும் கழகத்தின் வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துகளால் நிரம்பியிருக்கும். கடந்த 2021ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன். இந்தாண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசினேன். அதற்குள் அவரது மறைவுக்கு இரங்கல் சொல்லும் நாள் வந்துவிட்டதை எண்ணி மனம் வாடுகிறேன். கும்மிடிப்பூண்டி வேணு பிரிவால் வாடும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும், கும்மிடிப்பூண்டி தொகுதி வாழ் மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்லி என்னை நானே தேற்றி கொள்ள முயல்கிறேன். கும்மிடிப்பூண்டி வேணு என்றும் நம் நினைவுகளிலும் நெஞ்சங்களிலும் வாழ்வார்.

The post உடல் நலக்குறைவால் காலமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி: கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க மரியாதை appeared first on Dinakaran.

Tags : Kummidipundi Ki ,Chief Minister ,Venu Bodal K. ,Stalin ,Kummidipundi ,MLA ,Gummidipundi Ki ,Venu Bodal K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...