×

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெயர் பலகை திறந்து வைப்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் தேவி காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன் (வ.ஊ), துரை (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும், அதற்கான செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழு கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனை அடுத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள், அந்தந்த ஊராட்சிக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஒன்றிய குழு தலைவரிடம் கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது அனைத்து கோரிக்கைகளையும் நிதி நிலைக்கு ஏற்றவாறு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தற்போது 2021ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்களின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் பெயர் பலகை திறந்து வைத்து பேசினார். அப்போது மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. சதீஷ்குமார் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பல்நோக்கு அங்காடி, பகுதி நேர நியாய விலை கடை அமைக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையப்பன் நகர், காட்டேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கட்டேரி கிராமம் முதல் அனிபீரன் தெருவரை சாலை முழுவதும் சிதலமடைந்துள்ளதால், இதற்கு தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் அம்மையப்பன் நகர் ஊராட்சிக்குட்பட்ட பாய்க்காரன் வட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காக பல் நோக்கு அங்காடி மற்றும் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க வேண்டும்.

மேலும் கட்டேரி மற்றும் அம்மையப்பன் நகர் ஊராட்சிகளில் ஏற்கனவே கடந்த கூட்டத்தில் புதிய சாலைகள் அமைக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

The post ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெயர் பலகை திறந்து வைப்பு appeared first on Dinakaran.

Tags : Jollarpet ,Panchayat Union ,Jolarpet Panchayat Union ,Jolarpet ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...