×

கடந்த ஆண்டைப்போல் பெரியாறு-வைகை இருப்புநீர் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்

*முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

கூடலூர் : பெரியாறு வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பெரியாறு-வைகை இருப்புநீரை கணக்கில் வைத்து 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.உத்தமபாளையம், போடி வட்டத்தில் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 1999ம் ஆண்டு, அன்றைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது 18ம் கால்வாய் திட்டம்.

இந்த திட்டத்தின்படி லோயர்கேம்ப் தலைமதகிலிருந்து 40.80 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி, முல்லைப்பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது. தற்போது சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறுவரை 14.10 கிலோமீட்டர் நீட்சி என 54.90 கி.மீ, வரை செல்கிறது 18ம் கால்வாய். இக்கால்வாய் தண்ணீரை கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், சிந்தலச்சேரி, தே.மீனாட்சிபுரம், சங்காபுரம், சிலமலை ராசிங்காபுரம், டொம்புச்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள 51 கண்மாய்களுக்கு நீர் நிரப்பி, நிலத்தடிநீர் பெருகுவதோடு, நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் நிலமும், நீட்டிப்பு கால்வாயில் 2,225 ஏக்கர் என 6,839.25 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் மறைமுக நிலத்தடிநீர் உயர்வு பெறும்.

உத்தமபாளையம் வட்டம், புதுப்பட்டி இடையன்குளம், அனுமந்தன்பட்டி வள்ளியம்மன்குளம், கோம்பை பண்ணைபுதுக்குளம், வண்ணான்குளம், பண்ணைப்பரம் ஜக்கையகவுண்டன்குளம், குள்ளமச்சான்குளம், தாதன்குளம், செட்டிகுளம், திருமலைக் கவுண்டன்குளம், காமாட்சிகுளம், சிந்தலச்சேரி சீதாகவுண்டன்குளம், அரசமரத்துக்குளம், நல்லு கண்மாய், கரிசல்குளம், சங்கராபுரம் வெம்பக்கோட்டைகுளம், லெட்சுமி நாயக்கன்பட்டி கணபதி செட்டிகுளம், வெம்பக்கோட்டை மாசானம்குளம், தேவாரம் சன்னாசி நாயக்கன்குளம், அழகிரிநாயக்கன்குளம், அழகிரிசெட்டிகுளம், பெரியதேவிகுளம், சின்னதேவிகுளம், பழனிச்செட்டிகுளம், கிருஷ்ணபதிகுளம், பெரியநாயக்கன்குளம், பொட்டிபுரம் எர்ணன்குளம், தமபிரான்குளம், கொட்டுக்காரன்குளம், திம்மிநாயக்கன்குளம்போடி வட்டம் டெம்புச்சேரி டொம்பிச்சியம்மன்குளம், நாகமலையான்குளம், போசிகண்மாய், சாமியகவுண்டன்குளம், கவுண்டன்குளம், அம்மன்குளம், வைரவ கவுண்டன்குளம், மீனாட்சிபுரம் செட்டிகுளம், மீனாட்சிபுரம் கண்மாய், கோடாங்கிபட்டி சோதரணைகுளம், சிறுகுளம், பெரியகுளம், குருவன்குளம், கணக்கன்குளம், கன்னிமார்குளம், கட்டப்பொம்மன் குளம், கோட்டைக்குளம், காமராஜபூபால சமுத்திர கண்மாய், வண்ணான் ஊரணி, சூலப்புரம் கண்மாய், கெப்பான் ஊரணி, பாறைகுளம் ஆகிய 51 குளங்களும் பயன்பெறுகிறது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அக்டோபர் முதல் தேதிக்குப்பின் பெரியாறு மற்றும் வைகை அணையின் இருப்புநீர் 6250 மில்லியன் கனஅடியாக இருந்தால், 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணை உள்ளது. கடந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், தமிழகத்திலும் தீவிரமடைந்து, பெரியார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து, அணையின் நீர்மட்டமும் உயர்ந்ததால் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்தஆண்டு செப்.14ல் பெரியாறு அணையிலிருந்து 18ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது பருவமழை பெய்து நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.65 அடியாகவும், பெரியாறு வைகையின் இருப்பு நீர் 6605 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. எனவே பெரியாறு-வைகை இருப்புநீரை கணக்கில் வைத்து இந்த ஆண்டும் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பு நீர் 6500 மில்லியன் கனஅடி

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன் காட்சிக்கண்ணன் கூறுகையில், கடந்த 2021ல் 18ம் கால்வாயில் தண்ணீர் திறந்தும் தண்ணீரின் பாதையில் உள்ள தொட்டிப்பாலம் உடைந்ததால், 18ம் கால்வாய் நீட்சி பகுதியில் போடி வட்டத்தில் உள்ள கட்டப்பொம்மன்குளம், கோட்டைக்குளம், காமராஜபூபால சமுத்திர கண்மாய், வண்ணான் ஊரணி, சூலப்புரம் கண்மாய், கெப்பான் ஊரணி, பாறைகுளம் என ஏழு குளங்களுக்கும் தண்ணீர் செல்லவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் சென்றது. இந்த ஆண்டும் பெரியாறு வைகையின் இருப்பு நீர் 6500 மில்லியன் கனஅடியை தாண்டி உள்ளது. எனவே பெரியாறு-வைகை இருப்புநீரை கணக்கில் வைத்து இந்த ஆண்டும் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post கடந்த ஆண்டைப்போல் பெரியாறு-வைகை இருப்புநீர் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : canal ,Periyar-Vaikai reservoir ,Chief Minister ,Gudalur ,Periyar-Vaikai dams ,Periyar-Vaikai ,18th canal ,Dinakaran ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...