×

12 வருடத்திற்கு பிறகு குடமுழுக்கு திருஉத்தரகோசமங்கை சிவன்கோயில் பாலாலய பூஜை

ராமநாதபுரம் : திருஉத்தரகோசமங்கை மங்களநாதரர் கோயிலில் பழமையான ராஜகோபுரம் உள்ளிட்ட 20 கோயில் விமான கோபுரங்களுக்கு 6 மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட உள்ளதால் நேற்று பாலாலய பூஜைகள் நடந்தது.ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் சுமார் 3 ஆயிரத்து 100 ஆண்டு பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. சிவன்கோயில்களில் ஆதி சிதம்பரம் என அழைக்கப்படுகிறது.

இங்குள்ள விலை மதிக்கதக்க ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு மற்றும் ஆருத்ரா தரிசனம் உலக புகழ்பெற்றது. இங்கு நாள்தோறும் உள் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஆன்மீக சுற்றுலாபயணிகள் உள்ளிட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலுள்ள மண்டபம், தூண்கள்.

சிலைகள், சிற்பங்கள் உள்ளிட்டவை கலை நுணுக்கங்களுடன் அழகிய சிற்ப வேலை பாடுகளுடன் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கோயிலுக்கு கடந்த 2010ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஆகாம விதிகளின் படி இந்தாண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட உள்ளது.

இதற்காக ராமநாதபுரம் சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் தன்னார்வலர்களின் பங்களிப்போடு கலை நயமிக்க பாரம்பரிய தூண்கள், மேல்தளம் மற்றும் தரைத்தளத்துடன் கூடிய உள் பிரகார மண்டபங்கள். நந்தி மண்டபம், அம்பாள் சன்னதி மண்டபம், தூண்கள் தொல்லியல் துறையின் ஆலோசனைப்படி பழமை மாறாமல் அன்றைய கட்டுமான தொழில்நுட்ப உதவியுடன், எவ்வித மாற்றமும் இன்றி புதியதாக அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பணிகள் முடிவதற்கு சுமார் 6 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிரதான ராஜகோபுரங்கள் மற்றும் 20 விமான கோபுரங்களுக்கு பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டு நேற்று பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவிற்கு சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் தலைமை வகித்தார், பரம்பரை அறக்காவலர் அபர்ணாநாச்சியார் முன்னிலை வகித்தார். திவான் பழனிவேல்பாண்டியன் வரவேற்றார். நேற்று முன்தினம் மாலையில் கணபதி ஹோமத்துடன் வேள்வி பூஜைகள் தொடங்கியது. நேற்று பூர்ணாகுதி, புனித கும்பநீர் தெளித்தல் நடந்தது. இதனையொட்டி விக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சேதுபதி மன்னர் குடும்பத்தினர், கிராமமக்கள் மற்றும் சிவப்பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post 12 வருடத்திற்கு பிறகு குடமுழுக்கு திருஉத்தரகோசமங்கை சிவன்கோயில் பாலாலய பூஜை appeared first on Dinakaran.

Tags : Kudamuzku ,Thiruuttaragosamangai Sivan Temple ,Balalaya ,Pooja ,Ramanathapuram ,Raja ,Gopuram ,Thiruuttarakosamangai ,Mangalanathar temple ,
× RELATED மயில்ரங்கம் வைத்தீஸ்வரன் கோயிலில் பாலாலய விழா