×

குண்டேரிப்பள்ளம் அணையில் 30 ஆண்டுக்கு பிறகு வண்டல் மண் எடுக்க அனுமதி

*விவசாயிகள் மகிழ்ச்சி

கோபி : கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வண்டல் மண் எடுக்கவும், அணையை தூர்வாரவும் அரசு அனுமதி அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோபி அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியில் குன்றி மலையடிவாரத்தில் கடந்த 1980ம் ஆண்டு 42 அடி உயரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு மல்லிய துர்கம், விளாங்கோம்பை, கம்பனூர், கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளில் பெய்யும் மழை நீர் 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக தண்ணீர் வருகிறது.

இந்த அணையின் மூலமாக கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர், மோதூர், குண்டேரிப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டுதோறும் பாசன வசதி பெற்று வருகிறது.இந்நிலையில் இந்த அணை கட்டப்பட்ட பிறகு 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில் இதுவரை தூர்வாரப்படவில்லை. இதனால் காட்டாறுகள் வழியாக வரும் சேறு, வண்டல் மண் அணையில் தற்போது சுமார் 20 அடி உயரத்திற்கு தேங்கி உள்ளது. இதனால் மழை காலங்களில் அணை விரைவில் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் அணையை தூர்வார வேண்டும் என குண்டேரிப்பள்ளம் அணை பாசன விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகளின் தொடர் முயற்சி காரணமாக அணையை தூர் வாரவும், விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கவும் அனுமதி அளித்து உள்ளது.
அதைத்தொடர்ந்து நேற்று நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமார், உதவி பொறியாளர் குமார், டி.என்.பாளையம் வனசரக வனவர் ரகு, வானக்காப்பாளர் சுரேஷ், குண்டேரிப்பள்ளம் அணை பாசன சங்க விவசாயிகள் சங்க தலைவர் குப்புராஜ் மற்றும் விவசாயிகள் முன்னிலையில், அணையை தூர் வாரவும், வண்டல் மண் எடுப்பதற்கான பூஜை போடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன், வாணிப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சிவராஜ், பெரிய கொடிவேரி பேரூராட்சி தலைவர் தமிழ்மகன் சிவா, வாணிப்புத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கதிர் என்கிற கருப்புசாமி, வாணிப்புத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சம்பத்குமார், புள்ளப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் பிரகாஷ், அகம் கட்டுமான நிறுவன உரிமையாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நீர்வள ஆதராத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘குண்டேரிப்பள்ளம் அணையில் வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் விவசாய நிலத்தின் பட்டா, சிட்டா, ஆர்எஸ்ஆர் ஆகியவற்றுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோபி கோட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விவசாயிகளின் விண்ணப்பத்தினை கோட்டாட்சியர் பரிசீலனை செய்து, ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்களது நிலத்தின் அளவிற்கேற்ப வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளிப்பார்.
அந்த அனுமதியின் அடிப்படையிலேயே மண் எடுக்க அனுமதிக்கப்படும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை என்பதால், கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அவரது அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே வண்டல் மண் எடுக்க அனிமதிக்கப்படும் என்றனர்.

The post குண்டேரிப்பள்ளம் அணையில் 30 ஆண்டுக்கு பிறகு வண்டல் மண் எடுக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kunderippallam dam ,Gopi ,Gunderipallam dam ,Kunderipallam dam ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!