×

சிறுசேரி சிப்காட் அருகே 50 ஏக்கரில் நகர்ப்புற வன பூங்கா: சிஎம்டிஏ திட்டம்

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், சிறுசேரி சிப்காட் அருகே ராஜிவ்காந்தி சாலையில் 50 ஏக்கரில் புதிய பிரமாண்டமான நகர்ப்புற வன பூங்கா உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் தாவர வளர்ப்பு ஆர்வலர் அகிரா மியாவாக்கி. இவர், உருவாக்கிய செடி வளர்ப்பு முறைதான் மியாவாக்கி தொழில்நுட்பம். உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு சென்று இவர் தனது மியாவாக்கி தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்து வருகிறார். 92 வயதாகும் இவர், 1993ல் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு பெருநகரங்களுக்கு சென்று எப்படி காடுகளை வேகமாக உருவாக்குவது, மரங்களை வேகமாக வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து வருகிறார். உலகில் இருக்கும் பல பெரு நகரங்கள் இவரின் முறையை பின்பற்றி வருகிறது.

மியாவாக்கி தொழிநுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகமாக மரங்களை வளர்க்கும் தொழில்நுட்பம் ஆகும். மரங்கள் சாதாரணமாக வளரும் வேகத்தை விட இந்த மியாவாக்கி தொழில்நுட்பம் மூலம் 10 மடங்கு வேகமாக வளரும். அதேபோல் 30 மடங்கு அடர்த்தியாக இதன் மூலம் மரங்கள் வளரும். ஒரே இடத்தில் அருகருகே நிறைய உள்ளூர் மரங்களை நடுவது இந்த தொழில்நுட்பம் ஆகும். இதில் முக்கியமான விஷயம், வெறும் 20 வருடங்களில் இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காடுகளை உருவாக்கலாம். அதிலும் 3 வருடங்களுக்கு பின் இதை கவனிக்க வேண்டியதே இல்லை. அதுவாக தானாக வளர்ந்து கொள்ளும். செடிகளை நட்டு 3 வருடம் கவனித்தால் போதும், அதன்பின் அந்த மரங்கள் தானாக வளர்ந்து காடாக மாறிவிடும். இதனால்தான் உலக நாடுகள் மியாவாக்கி தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்துகிறது.

இந்தியாவில் பல பெருநகரங்கள் இந்த மியாவாக்கி தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சென்னையின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் அடையாறு ஆற்றங்கரை, சாலையோர திட்டுக்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மியாவாக்கி காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களில் இதுவரை சென்னையில் மொத்தம் 38 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில், மொத்தம் 78,126 சதுர மீட்டரில் 1,22,706 மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் மியாவாக்கி தொழில்நுட்பம் மூலம் குட்டி காடு ஒன்றை உருவாக்க உள்ளனர். சென்னையில் உருவாக்கப்பட உள்ள 3வது காடு இதுவாகும்.

சென்னையில், ஏற்கனவே கோட்டூர்புரம் மற்றும் அடையாறு பகுதிகளில் 2 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், சிறுசேரி சிப்காட் அருகே ராஜிவ்காந்தி சாலையோரம் 50 ஏக்கரில் புதிய பிரமாண்டமான நகர்ப்புற வன பூங்காவை உருவாக்க உள்ளது. இங்கே நிலம் ஒன்று வாங்கப்பட்டு அதில் 50 ஏக்கரில் மிகப்பெரிய காடு உருவாக்க முடிவு செய்துள்ளனர். சென்னை வானிலை, ஐடி பகுதியில் மரங்களின் தேவை ஆகியவற்றை மனதில் வைத்து இந்த காடு அமைக்கப்பட உள்ளது.

* 40 வகை செடிகள்

அடையாறு பகுதியில் ஏற்கனவே 2000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 40 வகையான செடிகள் அடையாறில் நடப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் சதுர அடிக்கு இந்த அடையாறு காடு உருவாக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வளசரவாக்கத்தில் மொத்தம் 700 செடிகள் நடப்பட்டு உள்ளது. இங்கு 45 வகையான செடிகள் நடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் சதுர அடிக்கு இங்கு செடிகள் நடப்பட்டுள்ளது.

The post சிறுசேரி சிப்காட் அருகே 50 ஏக்கரில் நகர்ப்புற வன பூங்கா: சிஎம்டிஏ திட்டம் appeared first on Dinakaran.

Tags : Urban Forest Park ,Sirusheri Chipkot ,CMDA ,Chennai ,Chennai Metropolitan Development Corporation ,Rajiv Gandhi Road ,Siruchery Chipgat ,Dinakaran ,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...