திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக தண்ணீரின் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அமலதீபன் தலைமை தாங்கினார். உதவி நிலநீர் வல்லுநர் சௌந்தர்ராஜன், சேவ் தன்னார்வ அமைப்பின் செயலாளர் பிரதாப், உதவி பொறியாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதற்கு முன்னதாக, மாவட்ட கலெக்டர் பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களிடம் தண்ணீரின் அவசியம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கி பாராட்டினார்.
இந்த பேரணியில் மாணவ, மாணவியர்கள் முக்கிய வீதிகள் வழியாக மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி பராமரிக்க வேண்டும்.
கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள், நீராதார கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்த வேண்டும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வீட்டுக் கூரையை மழைக்காலத்திற்கு முன் சுத்தம் செய்து, காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்த வேண்டும், மழைநீர் சேமிப்பு தொட்டி 1000 லிட்டர் அளவுள்ள சேமிப்புக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கரைசலை சேமிக்கப்பட்ட மழைநீரில் கலக்க வேண்டும்,
மழைநீர் கொண்டு வரும் குழாய்களில் அடைப்புகளை நீக்கி பழுதுகளை சரிசெய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு காணொளி வாகனம் மூலம் விழிப்புணரவு ஏற்படுத்தி, வாகனத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். இதில் மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.