×

இன்று ஒன்றல்ல இரண்டு மோதல்

* நெதர்லாந்து-இலங்கை

லக்னோ: உலக கோப்பையின் 19வது லீக் ஆட்டத்தில் இன்று நெதர்லாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன. லக்னோவில் களம் காணும் இந்த 2 அணிகளுக்கும் இது 4வது ஆட்டம். நெதர்லாந்து இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வென்றுள்ளது. அதிலும் வலுவான தென் ஆப்ரிக்க அணியை தோற்கடித்து, கிரிக்கெட் உலகின் கவனத்தை ஸ்காட் எட்வர்ட் தலைமையிலான நெதர்லாந்து அணி ஈர்த்துள்ளது. அந்த வெற்றிக் களிப்பில் இலங்கையை இன்று எதிர்கொள்கிறது. இலங்கை அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் மண்ணைக் கவ்வியுள்ளது. கேப்டன் தசுன் ஷனகா காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் குசால் ெமண்டீஸ் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அதனால் அணியில் ஏற்றம் ஏதும் ஏற்படுவில்லை. தொடர்ந்து ஏமாற்றம்தான். நடப்புத் தொடரில் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றிப் பெறாத ஒரே அணி இலங்கை தான்.

இந்த 2 அணிகளும் தகுதிச் சுற்றில் விளையாடிதான் உலக கோப்பைக்கு முன்னேறின. ஜூலையில் நடந்த அந்த 2 தகுதிச் சுற்று ஆட்டங்களில் இலங்கைதான் வென்றது. அதனால் முதல் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் இலங்கை களம் காண இருக்கிறது. நெதர்லாந்தும் 2வது வெற்றி கனவில் உள்ளது. அதனால் இரு அணிகளுக்கு இடையில் இன்று பரபரப்பான ஆட்டத்துக்கு பஞ்சமிருக்காது.

* இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா

மும்பை: உலக கோப்பை தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை போட்டித் தொடங்கி 2 வாரங்களுக்கு மேல் ஆன நிலையில் மும்பையில் இன்றுதான் முதல் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த 2 அணிகளுக்கும் இது 4வது ஆட்டம். மீண்டும் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ள அணியாக களமிறங்கிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. அதிலும் கடைசி ஆட்டத்தில் அனுபவமில்லாத அணியான ஆப்கானிடம் மண்ணை கவ்வியுள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது ஒரு பின்னடைவாக உள்ளது.

அதே நேரத்தில் வலுவான தென் ஆப்ரிக்கா அணியும் அனுபவமில்லாத நெதர்லாந்து அணியிடம் அடிபணிந்தது. இத்தனைக்கும் டெம்பா பவுமா தலைமையிலான தெ.ஆப்ரிக்கா தான் டி காக், டுசன், மார்க்ரம் ஆகியோர் மூலமாக அதிக சதங்கள் வெளுத்த வீரர்கள் உள்ள அணியாக திகழ்கிறது. எனினும் நெதர்லாந்திடமான அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் தெ.ஆப்ரிக்கா உள்ளது. மொத்தத்தில் 2 அணிகளும் பெரும் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு விளையாடுப் போகும் ஆட்டம் இது. இன்று மட்டுமல்ல இனி வரப்போகும் ஆட்டங்களிலும் வெற்றி கட்டாயம். அதனால் இரு அணிகளும் வெற்றிக்கு வரிந்துக் கட்டுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.

The post இன்று ஒன்றல்ல இரண்டு மோதல் appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Sri Lanka ,Lucknow ,19th league ,World Cup ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...