×

10 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றம் தங்கா ஆட்சி நீடிக்க கைகொடுக்குமா?: மும்முனை போட்டியில் மிசோரம்

1972ம் ஆண்டில் இருந்து இதுவரை மிசோரமில் 9 முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். 3 முறை கவர்னர் ஆட்சி நடந்துள்ளது. மிசோரமுக்கு 1987ம் ஆண்டு மாநில அந்தஸ்து கிடைத்தது. அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் லால்டெங்கா முதல்வராக இருந்தார். பின்னர் 1989ம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை காங்கிரசும், மிசோ தேசிய முன்னணியும் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றியுள்ளன. அதாவது, ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்துள்ளன. மாநில அந்தஸ்து பெற்ற பிறகு, 20.2.1987 முதல் 07.09.1988 வரை லால்டெங்கா முதல்வராக இருந்தார். பின்னர் கவர்னராட்சி நடந்தது. இதைத்தொடர்ந்து 24.01.1989 முதல் 03.12.1998 வரை லால்தன் ஹாவ்லா (காங்கிரஸ்), 4.12.1998 முதல் 9.12.2008 வரை சோரம்தங்கா, 11-12-2008 முதல் 12-12-2018 வரை லால்தன்ஹாவ்லா முதல்வராக இருந்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பிடித்தது. அதன் தலைவர் சோரம்தங்கா முதல்வரானார். மணிப்பூரில் மத மற்றும் இன அடையாளங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குக்கி, சின் உள்ளிட்ட இன குழுக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சோரம் தங்கா, ஒன்றிய அரசின் உத்தரவை மீறி மியான்மரில் இருந்து வந்த சின் அகதிகள் 35,000 பேருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இவர்கள் மிசோ இனத்தில் இருந்து பிரிந்து உருவான இனத்தை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு மேலும் 12,000 குக்கி – ஜோமி இன மக்களுக்கு தஞ்சம் அளித்துள்ளார். இவர்கள், மணிப்பூரில் இருந்து வந்தவர்கள்.

மிசோ இனத்தின் பிரிவுகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததால், அந்த இனத்தின் ஒட்டுமொத்த தலைவராக தன்னை முன்னிறுத்தியுள்ள இவருக்கு, மிசோ இன வாக்குகள் பெரும்பான்மையாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த 2017ம் ஆண்டு உருவான ஜோரம் மக்கள் முன்னணிக்கும் (இசட்.பி.எம்) மிசோ இன வாக்குகள் பிரிந்து செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னணியின் தலைவர் லால்டுஹோமா, மாநிலத்தின் மேம்பாட்டுக்காகவும், ஊழல் ஒழிப்புக்காகவும் போராடி வருகிறார். நகர்ப்புற இளம் வாக்காளர்கள் இவரை நோக்கி ஈர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. முதல் முறை தேர்தலை சந்தித்த 2018ம் ஆண்டில் இந்த கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இங்கு வேறு கட்சிக்கு ஆட்சி கைமாறுகிறது. இந்த டிரண்டிங்கை உடைத்து இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சி, முந்தைய அரசில் நிதியமைச்சராக இருந்த லால்சாவ்டாவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி வாக்குகளை அள்ள திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இவர் ஊரகப் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள், விவசாயிகள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி தீர்வு கண்டவர், ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்.

இந்த நற்பெயர் கைகொடுக்கும் என நம்புகிறது காங்கிரஸ். எனவே, மிசோரமில் இந்த முறை மும்முனை போட்டி உருவாகியுள்ளது. பாஜ களத்தில் இருந்தாலும் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை.ஏஜெனில் இந்த மாநிலத்தில் சுமார் 87 சதவீத மக்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். எனவே, இந்துத்துவாவை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் பாஜ இங்கு ஆட்சியை பிடிக்கும் போட்டியிலேயே இல்லை என்று கூறலாம். மியான்மரில் இருந்து வந்த சின் அகதிகள், மணிப்பூரில் இருந்து வந்த குக்கி ஜோமிஸ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவு தந்ததுசோரம்தங்காவுக்கு பலமாக கருதப்படுகிறது. அதேநேரத்தில்,குறிப்பிட்ட இன மக்களை வாக்கு வங்கியாக வைத்திருப்பது மட்டுமே வெற்றிக்கு உதவாது எனவும், மாநில மேம்பாட்டு திட்டங்களில் இவர் கவனம் செலுத்தவே இல்லை எனவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த முறையும் இவர் வெற்றி பெற்று 10 ஆண்டு ஆட்சிமாற்ற வரலாறை தொடர்வாரா என்பதற்கு தேர்தல்தான் பதில் சொல்ல வேண்டும்.

The post 10 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றம் தங்கா ஆட்சி நீடிக்க கைகொடுக்குமா?: மும்முனை போட்டியில் மிசோரம் appeared first on Dinakaran.

Tags : Dhanga ,Mizoram ,Thanga ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...