×
Saravana Stores

மதுராந்தகம் அருகே சுடுகாடுக்கு சாலை அமைக்க எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பாக்கம் ஊராட்சியில் தாதங்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் சுடுகாட்டின் வழிப்பாதை கிராமத்திற்கு உட்பட்ட அரசு புறம்போக்கு நிலம் மற்றும் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களில் பல ஆண்டு காலமாக இருந்து வந்துள்ளது. இந்த பாதையை கடந்துதான் குறிப்பிட்ட அந்த சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வது வழக்கம்.

இந்த கிராமத்தில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் இருவர் வெளியூரில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தங்கள் நிலத்தின் மீது சுடுகாட்டு பாதை செல்வதை அனுமதிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் இது தனக்கு உண்டான நிலம், இதில் நீங்கள் செல்லக்கூடாது எனக் கூறி அந்த பாதையில் பள்ளம் தோண்டி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தாதங்குப்பம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த பொன்னுரங்கம் (77) என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வழியின்றி தவித்த அவரது உறவினர்கள் மதுராந்தகம் வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு சென்ற அரசு துறை அதிகாரிகள், பாதையை மறித்து பள்ளம் தோண்டிய பகுதியில் மண்ணை கொட்டி பாதையை சீரமைத்தனர். இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து தாதங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘இந்த பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றமும் குறிப்பிட்ட சுடுகாட்டு பாதையில் சாலை அமைத்து தரவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஓரிரு தனிநபர்கள் வேண்டுமென்றே அவர்களின் சுய விருப்பத்திற்காக சுடுகாட்டு பாதையில் சாலை அமைக்கும் பணியை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, பாதையாக இருக்கும் பகுதியிலும் பள்ளம் தோண்டி பல ஆண்டுகளாக கிராமமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதையை துண்டித்து வைக்கின்றனர். இதுபோன்ற நிலைமையை தவிர்க்க அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post மதுராந்தகம் அருகே சுடுகாடுக்கு சாலை அமைக்க எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Shudugadu road ,Madurandkam ,Maduranthakam ,Dathanupam ,Pakkam Oratchi ,Madurandam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் அருகே நேற்று அதிகாலை...