×

ரூ.2.76 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய மோட்டார் வாகன பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: நெல்லை வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

நெல்லை: தென்காசி மாவட்டம், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள புளியரை மோட்டார் வாகன செக்போஸ்டில் நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு சென்ற மோட்டார் வாகன பெண் இன்ஸ்பெக்டர் பிரேமா ஞானகுமாரியின் காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 400ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நெல்லை பெருமாள்புரம் கிருஷ்ணா நகரில் உள்ள பல கோடி மதிப்பில் கேரள பாரம்பரியத்துடன் நீச்சல் குளம் மற்றும் நவீன வசதிகளுடன் பிரேமா ஞானகுமாரி கட்டி உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 7 மணிமுதல் சோதனை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் பிரேமா ஞானகுமாரி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளை கேட்டு வாங்கி சென்று பணியாற்றி உள்ளதும், பாளை என்ஜிஓ ஏ காலனியில் ஒரு திருமண மண்டபம் கட்டி உள்ளதும் மற்றும் சொந்த ஊரான நாகர்கோவில் அருகே அழகிய மண்டபத்தில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்துள்ளது. சோதனையில் 12 வகையான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் டிவிஆர் கருவிகளை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டில் சிக்கியதால் பிரேமா ஞானகுமாரி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரேமா ஞானகுமாரியை சஸ்பெண்ட் செய்து தென்காசி ஆர்டிஓ கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

* ஓசூர், கோவையிலும் சிக்கியவர்
பிரேமா ஞானகுமாரி ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய போது அவரிடமிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கைப்பற்றியுள்ளனர். இதுபோல் 2013ம் ஆண்டு கோவையில் அவர் வேலை பார்த்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையிலும் கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. இந்த 2 வழக்குகளையும் லஞ்ச ஒழிப்பு தீர்ப்பாயத்தில் அவர் எதிர்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

* லஞ்சமாக முட்டை, பழங்கள்
தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய ஆர்டிஓ பெண் இன்ஸ்பெக்டர் பிரேமா ஞானகுமாரியின் காரில் காய்கறிகள், பழங்கள், முட்டை, பூக்கள், பேரீச்சம்பழம் ஆகிய பொருட்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். இந்த பொருட்களை கேரளாவுக்கு லாரிகள் மற்றும் லோடு ஆட்டோக்களில் கொண்டு செல்லும் டிரைவர்களிடம் லஞ்சமாக இன்ஸ்பெக்டர் பிரேமா ஞானகுமாரி பெற்றது தெரியவந்தது.

The post ரூ.2.76 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய மோட்டார் வாகன பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: நெல்லை வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Nellai ,Puliarai, Tamil Nadu - Kerala ,
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...