×

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணியில் விரிசல் சந்திரபிரியங்கா பதவி பறிப்பு நிராகரிப்பு ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: மாஜி முதல்வர் பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: ‘என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால்சந்திர பிரியங்கா பதவி பறிப்பு நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் முதல்வர் ரங்கசாமி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் அமைச்சராக இருந்து ராஜினாமா கடிதம் கொடுத்த சந்திரபிரியங்கா, தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறாரா அல்லது முதல்வர் ரங்கசாமி தனது அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க வேண்டுமென்று கவர்னர் தமிழிசைக்கு கடிதம் கொடுத்த நிலையில், அது டெல்லிக்கு அனுப்பப்பட்டது.

அந்த கடிதம் நிராகரித்து விட்டதாக தகவல் வருகிறது. எனவே அவர் அமைச்சராக நீடிக்கிறார் என்பது உண்மை. ஆனால் சபாநாயகர் செல்வம், சந்திர பிரியங்கா எம்எல்ஏவாக தொடர்கிறார் எனக்கூறி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறி உள்ளார். என்ஆர் காங்கிரஸ்-பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக ரங்கசாமியின் கடிதம், உள்துறை அமைச்சகத்தால் ஏற்கபடவில்லை. இந்த நாடகத்தை முழுமையாக பாஜக அரங்கேற்றி வருகிறது. ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்று இந்த வேலையை பாஜ செய்து வருகிறது.

ஆனால் புதுவையில் உள்ள பாஜவைச் சேர்ந்த சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ரங்கசாமிக்கு ஆதரவாக இருப்பதுபோல் நாடகமாடிக் கொண்டு, இரட்டை வேடம் போடுகிறார்கள். எனவே முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு அமைச்சரை நீக்கவும், சேர்க்கவும் முதல்வருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தில் உள்துறை அமைச்சகம் இப்போது நேரடியாக ஈடுபட்டு இருக்கிறது. முதல்வர் ரங்கசாமியின் கடிதம் நிராகரிக்கப்பட்டு விட்டதால் அவர் இப்பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர். ஆனால் பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வீரவசனம் பேசுகிறார்களே தவிர, இரண்டரை ஆண்டு காலமாக பாஜ சொல்வதை தான் கேட்டு வருகிறார்.

எம்எல்ஏக்கள் தனது கருத்துக்களை முதல்வரிடமும், அமைச்சரிடமும் கூறலாம். ஆனால் சபாநாயகர் மாதம் ஒருமுறை டெல்லி செல்கிறார். ஒன்றிய அமைச்சர்களை சந்திக்கிறார். ஆனால் ரங்கசாமிக்கு எதிராகதான் பாஜவின் செயல்பாடு உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்விக்குறி மக்களிடம் எழுந்துள்ளது. இதுபோன்ற புதுவை மாநில மக்களை ஏமாற்றுகின்ற, மக்களுக்கு உண்மை நிலையை சொல்லாத ஒரு மர்மமான என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி அரசு நடந்து வருகிறது. அதற்கு முதல்வர் ரங்கசாமி தலைமையேற்று இருக்கிறார்.

அமைச்சர் சந்திரபிரியங்காவின் பதவிநீக்க கோரிக்கையை மத்திய உள்துறை நிராகரித்த பிறகு ஒருநிமிடம் கூட அவர் முதல்வராக நீடிக்கக் கூடாது. மானம் மரியாதை இல்லாமல் அப்பதவி அனுபவிப்பதது அவருக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறினார். ஒரு அமைச்சைர நீக்கவும், சேர்க்கவும் முதல்வருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தில் உள்துறை அமைச்சகம் இப்போது நேரடியாக ஈடுபட்டு இருக்கிறது. முதல்வர் ரங்கசாமியின் கடிதம் நிராகரிக்கப்பட்டு விட்டதால் அவர் இப்பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர். மானம் மரியாதை இல்லாமல் அப்பதவி அனுபவிப்பதது அவருக்கு அழகல்ல.

* முதல்வர் இல்லாமல் ஆலோசனை பாஜவின் ஏஜென்ட் சபாநாயகர்
நாராயணசாமி கூறுகையில், ‘சபாநாயகர் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார். அந்த கூட்டத்தில் தலைமை செயலர் அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும், அவரை உடனடியாக உள்துறை அமைச்சகம் திரும்ப பெற வேண்டுமென்று பேசி இருக்கிறார். மத்தியில் இருப்பது பாஜ ஆட்சி. புதுவையில் இருப்பது தேஜ கூட்டணி ஆட்சி. உள்துறை அமைச்சரை சந்தித்து ஒரு மணி நேரத்தில் இந்த உத்தரவை வாங்கியிருக்கலாம்.
ஆனால் ஒரு வருடமாக என்ஆர் காங்கிரசும், பாஜகவும் தலைமை செயலரை மாற்ற வேண்டுமென்று கூறி வருகிறார்கள். முதல்வர் ரங்கசாமி இதுபோன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. ஆனால் சபாநாயகர் இதுபோன்ற கூட்டத்தை கூட்டுகிறார். யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது?. சபையை நடத்துவதுதான் அவருடைய வேலை. அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. பாஜவின் ஏஜென்டாக சபாநாயகர் செயல்படுகிறார்’ என்றார்.

The post என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணியில் விரிசல் சந்திரபிரியங்கா பதவி பறிப்பு நிராகரிப்பு ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: மாஜி முதல்வர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rangasamy ,Virisal Chandrapriyanka ,NR Congress-Baj alliance ,Puducherry ,Chandra Priyanka ,Chief Minister ,Chandrapriyanka ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...