×

சிவகாசியில் அடுத்தடுத்து விபத்தால் அதிரடி சோதனை ரூ.50 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்: 30 பேர் மீது வழக்கு ஆலைகளுக்கு சீல்

சிவகாசி: சிவகாசியில் 2வது நாளாக நடந்த சோதனையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கடந்த 17ம் தேதி அடுத்தடுத்து இரண்டு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து விபத்துக்களை தடுக்க 10 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்ட குழுவினர் விதிமீறலில் ஈடுபட்ட 7 பட்டாசு கடைகளுக்கு சீல் வைத்தனர். நேற்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்தது.

சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி, ஆனையூர், அனுப்பன்குளம், சிவகாமிபுரம், திருத்தங்கல் – விருதுநகர் ரோடு மற்றும் சிவகாசி பி.கே.என்.ரோடு, காந்தி ரோடு பகுதிகளில் இயங்கும் பட்டாசு கடைகளில் இரவு வரை தொடர் சோதனை நடத்தினர். இதில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் தயாரித்த கடை உரிமையாளர்கள் உட்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமத்தில் இயங்கும் பட்டாசு ஆலையில் அனுப்பன்குளம் விஏஓ காளியப்பன் சோதனை செய்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட சரவெடிகள் செய்யப்பட்டதாகவும் மரத்தடியில் பாதுகாப்பின்றி பட்டாசுகள் தயாரித்ததாகவும் கூறி சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் முருகன், கணக்குப்பிள்ளை செல்லபாண்டி ஆகிய 2 பேர் மீதும் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சீல் வைப்பு: சிவகாசி பாலாஜி நகரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனிற்கு, பட்டாசு தனி தாசில்தார் சாந்தி தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் சீல் வைத்தனர். ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,400 பட்டாசு பண்டல்களையும் பறிமுதல் செய்தனர். சிவகாசி, சாத்தூர் ரோட்டில் அரசு பஸ் டிப்போ அருகே கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் அனுமதியின்றி தகர செட் அமைத்து பட்டாசு பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பட்டாசு கடைக்கு சீல் வைத்தனர். இதேபோல் நதிக்குடியில் கடந்த 8 மாதத்திற்கு முன் சீல் வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக திறந்து பட்டாசு உற்பத்தி செய்த ஆலைக்கு மீண்டும் சீல் வைத்தனர். ஆலையின் உரிமையாளர் சோலைராஜ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகாசி பகுதியில் தொடர்ந்து பட்டாசு கடைகளிலும் ஆலைகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சிவகாசியில் அடுத்தடுத்து விபத்தால் அதிரடி சோதனை ரூ.50 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்: 30 பேர் மீது வழக்கு ஆலைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Dinakaran ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் 84 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்