×

இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கிறது: காங்கிரஸ் பொதுச்செயலர் விமர்சனம்


புதுடெல்லி: இஸ்ரேல் விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஏமாற்றமளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இடையே நடந்து வரும் போரில் இந்தியாவின் கடந்த கால நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரின் தொடக்கத்தின் முதலே இந்தியாவின் நிலைப்பாடு மாறுபட்டுள்ளது. கடந்த காலங்களில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே நடைபெற்ற போர்களில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு இந்தியா ஆதரவளித்தது. இரு நாடுகளும் ஏதேனும் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய முற்படும்போது, அதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கும்.

ஆனால் தற்போதைய ஒன்றிய அரசு போரை முடிவுக்குக் கொண்டு வர எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்ைல. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. போரில் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கும்போது கண்ணியத்துடன் நிற்க வேண்டியது அவசியம். காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் பலியாகினர். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்ட இந்தச் சம்பவத்தில் இந்தியா தனது ஆதரவை யாருக்கு வழங்க வேண்டும் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்பினருமே சர்வதேச மனிதநேயச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதற்காக ஹமாஸ் அமைப்பினர் பெண்கள், குழந்தைகள் மீது நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.

காசாவை முழுமையாக அழிக்க நினைக்கும் இஸ்ரேலுக்கு சில நாடுகள் ஆதரவளிப்பது ஆச்சரியமாக உள்ளது. அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டாம் என வலியுறுத்துகிறேன். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், மீண்டும் அங்கு அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கிறது: காங்கிரஸ் பொதுச்செயலர் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : EU ,Israel—Hamas ,Congressional ,Secretary General ,NEW DELHI ,Congress ,K. C. Venugopal ,Israel ,Hamas ,EU government ,Dinakaran ,
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...