×

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலால் 41 தூதர்களை திரும்ப பெற்றது கனடா


ஒட்டாவா: இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் காரணமாக இந்தியாவிலிருந்து 41 தூதர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் திரும்பப் பெற்றதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக, அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் குற்றம்சாட்டினார். அத்துடன், இந்திய தூதரக உயரதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறவும் கனடா அரசு உத்தரவிட்டது. ஆனால், ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளில் உள்நோக்கம் உள்ளதாக குறிப்பிட்டு, அவற்றை நிராகரித்த இந்தியா, கனடா தூதரக உயரதிகாரி வெளியேற உத்தரவிட்டது. மேலும், அந்நாட்டினருக்கு நுழைவு இசைவு வழங்குவதையும் இந்தியா நிறுத்தியது.

இந்த விவகாரத்தால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து 41 தூதர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் திரும்பப் பெற்றதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘கனடா தூதர்கள் இந்தியாவிலிருந்து பாதுகாப்பாக புறப்படுவதற்கு தேவையான வசதிகளையும் நாங்கள் செய்துள்ளோம். எங்களுடைய தூதர்களும் அவர்களது குடும்பத்தினரும் இப்போது தூதரக அலுவலகங்களை விட்டு புறப்பட்டுவிட்டனர். தூதரக அதிகாரிகள் எங்கிருந்து வந்தாலும், எங்கு அனுப்பப்பட்டாலும் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தூதர்கள் இருக்கும் நாட்டிலிருந்து பழிவாங்கப்படுதல் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சம் இல்லாமல் தங்கள் வேலையைச் செய்ய சர்வதேச சட்டங்கள் அனுமதிக்கின்றன.

ஒவ்வொரு நாடும் அந்த விதிகளுக்கு உட்பட்டால் மட்டுமே அவை செயல்படும். ராஜதந்திர சிறப்புரிமை மற்றும் விலக்குகளை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்வது சர்வதேச சட்டத்திற்கு முரணானது. இது தெளிவான சர்வதேச சட்ட மீறலாகும். கனடாவிற்கு பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் கிடையாது. கனடா தொடர்ந்து சர்வதேச சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தொடரும். மேலும், இந்தியாவின் முடிவு இரு நாடுகளிலும் உள்ள குடிமக்களுக்கான சேவை வழங்கல் அளவை பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள எங்கள் தூதரகங்களில் உள்ள அனைத்து தனிப்பட்ட சேவைகளையும் நாங்கள் நிறுத்த வேண்டியது துரதிர்ஷ்டவசமானது’ என்று அவர் கூறினார்.

The post இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலால் 41 தூதர்களை திரும்ப பெற்றது கனடா appeared first on Dinakaran.

Tags : Canada ,India ,Ottawa ,Dinakaran ,
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்