×

மீல்மேக்கர் வடகறி

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 1 கப்
வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அரைப்பதற்கு…

பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 6 பல்
சோம்பு – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 1/2 கப்

குழம்பிற்கு…

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 2
பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
தக்காளி – 1 (அரைத்தது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சுடுநீரை எடுத்து, அதில் மீல் மேக்கரை சேர்த்து, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து, அதில் இருந்து பாதியை தனியாக குழம்பிற்கு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஜாரில் உள்ள மீதமுள்ளதில் பொட்டுக்கடலை, மிளகாய், தூள், மல்லித் தூள் சேர்த்து மென்மையாக அரைத்து பொடி செய்து, அதை ஒரு அகலமான பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஊற வைத்துள்ள மீல் மேக்கரை குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, சற்று கொரகொரவென்று அரைத்து, அதை அரைத்து வைத்துள்ள பொடியுடன் சேர்க்க வேண்டும். அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதி வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வடை பதத்திற்கு நன்கு பிரட்டி, பின் அவற்றை வடைகளாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீல்மேக்கர் வடை தயார்.

இதை அப்படியே கூட ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதங்கியதும், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளற விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். பின்பு ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மிக்சர் ஜாரில் தேங்காயைப் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரையும் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக பொரித்து வைத்துள்ள மீல்மேக்கர் வடைகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மீல்மேக்கர் வடகறி தயார்.

The post மீல்மேக்கர் வடகறி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...