×

கேரள முன்னாள் முதல்வர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு இன்று 100வது பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து


திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் வி.எஸ். அச்சுதானந்தன் (100). 1923ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள புன்னப்புராவில் பிறந்தார். இளமை பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டவர். குடும்ப சூழல் காரணமாக 4வது வகுப்புக்கு பிறகு படிக்கவில்லை. ஆனால் தொழிலாளர்களின் தலைவரான இவர் கேரள மாநிலத்தின் முதல்வராகி சாதனை படைத்தார். 1967 முதல் 77 வரை அம்பலப்புழா தொகுதி எம்எல்ஏவாகவும், 1991 முதல் 96 வரை மாராரிக்குளம் தொகுதி எம்எல்ஏவாகவும், 2001 முதல் 2021 வரை மலம்புழா தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார்.

3 முறை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். கடந்த 2006ம் ஆண்டு அச்சுதானந்தன் தனது 82வது வயதில் முதல்வரானார். 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றபோது மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக பினராயி விஜயன் முதல்வரானார். அச்சுதானந்தனுக்கு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2016 முதல் 2021 வரை பதவியில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 4 வருடமாக அச்சுதானந்தன் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள அவரது மகன் அருண்குமார் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இன்று 100வது பிறந்தநாள் கொண்டாடும் அச்சுதானந்தனுக்கு பிரதமர் மோடி, கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

The post கேரள முன்னாள் முதல்வர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு இன்று 100வது பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Former ,Kerala ,V. S. ,Achuthanandan ,Thiruvananthapuram ,Communist Party ,India ,V. S. Achuthanandan ,Former Chief Minister of ,Senior ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி....