×

வில்லியனூர்-பத்துக்கண்ணு சாலையில் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அதிகரிப்பு

*இரவில் மட்டும் இயங்க கோரிக்கை

வில்லியனூர் : வில்லியனூர்-பத்துக்கண்ணு சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் இரவில் மட்டும் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான திருவக்கரை, தொள்ளமூர், மயிலம் ஆகிய பகுதிகளில் கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து ஜல்லி, எம்சாண்ட், மண், கிராவல், மலை கற்கள் போன்றவற்றை டிப்பர் லாரி மற்றும் கனரக வாகனங்களில் ஏற்றி வந்து விற்பனை செய்து வருகின்றனர். புதுச்சேரியில் கல்குவாரிகள் இல்லாததால் தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்கின்றனர்.

இந்நிலையில் இங்கிருந்து ஜல்லி, மண், மலை கல் போன்றவற்றை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் பெரும்பாலும், திருவக்கரையில் இருந்து காட்டேரிக்குப்பம், சந்தைபுதுக்குப்பம், வழுதாவூர், சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், பத்துக்கண்ணு, கூடப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக வில்லியனூர் மற்றும் புதுவையின் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த காலங்களில் 6 வீல் டிப்பர் லாரி மட்டும் தான் ஜல்லி, மண் கொண்டு செல்லப்பட்டது. தற்போது 12 வீல், 14 வீல் போன்ற மிக கனரக வாகனங்களில் ஏற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுவையில் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்த கனரக வாகனங்கள் அனைத்தும் கிராமப்பகுதிகள் வழியாகவே வந்து செல்கிறது. இவைகள் அனைத்தும் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. குறிப்பாக வில்லியனூர்-பத்துக்கண்ணு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

ரயில்வேகேட் அருகே கடந்த மாதம் தொடர்ந்து 2 முறை ஒரே இடத்தில் விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். முன்னதாக உளவாய்க்கால் கிராமத்தில் பைக்கில் சென்ற ஒரு வாலிபர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சேதராப்பட்டு பகுதியில் சென்டர் மீடியன் கட்டையில் மோதி ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது. கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்களின் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் செல்வதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி சாலைகள் விரைவில் சேதமடைகிறது. ஆகையால் புதிதாக போடப்படும் சாலைகள் 5 ஆண்டுகளுக்குள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்றார்போல் சாலைகள் தரமாக அமைக்கப்படுகிறதா? அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இந்த வாகனங்கள் பொதுவாக காலை மாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் அணிவகுத்து தொடர்ந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்ற ஜல்லி, மண், கல் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் இரவில் மட்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வாகனத்திலும் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என போக்குவரத்து போலீசார் சோதனை செய்ய வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

The post வில்லியனூர்-பத்துக்கண்ணு சாலையில் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Willianur-Pathukannu road ,Willianur ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...