×

பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற ஆண்டிபட்டியில் அரசு பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?

*கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் தனியார் பால் கொள்முதல் நிலையத்தை சேர்ந்தவர்கள் பால் உற்பத்தியாளர்களிடம் குறைந்த விலைக்கு பாலை பெற்றுக்கொண்டு வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு வருவாய் குறைந்து பாதிக்கப்படுவதால் அரசு பால் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் கடமலை-மயிலை‌ ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது‌. ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களும் 100க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன. இதேபோல் கடமலை – மயிலை ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட உட் கிராமங்களும் உள்ளன. இந்த பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, தென்னை, முருங்கை‍, கத்தரி, வெண்டை, சோளம் கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் செய்து வருகின்றனர்.

இதில் அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, டி.புதூர், புள்ளிமான்கோம்பை, குன்னூர், அம்மச்சியாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். மற்ற பகுதிகளில் மழையை எதிர்பார்த்தும், நிலத்தடி நீரை வைத்தும் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டிபட்டியில் வைகை அணை இருந்தும் ஆண்டிபட்டி பகுதி மக்களின் விவசாயத்திற்கு பயன்படாத ஒன்றாக உள்ளது‌. இதனால் இங்கு விவசாயம் 70 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் ஆண்டிபட்டியில் விவசாயம் செய்த பலர் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு பிழைப்புக்காக சென்றுள்ளனர்.

இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் செய்த பலர் கால்நடை வளர்ப்பு தொழிலை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.அதிலும் கற‌வை மாடு வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கறவை மாடு வளர்ப்பு தொழிலில் பால் உற்பத்தி செய்து விற்பனை செய்வது முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களும் கறவை மாடு வளர்த்து பால் உற்பத்தி மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

இதில் சிறிய இடங்களில் கூட இரண்டு மாடுகள் வளர்த்து வருகின்றனர். சொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் கொட்டகை அமைத்து 10 மாடுகள் வரை வளர்த்து தொழில் செய்து வருகின்றனர். வேளாண்மை சார்ந்த தொழில்களில் பெரும்பாலான வேலை வாய்ப்பு அதிக லாபமும் கிடைக்கும் தொழிலாக பால் உற்பத்தி தொழில் உள்ளது. இதனால் படித்த பட்டதாரிகளும் கறவை மாடு வளர்த்து பால் உற்பத்தி செய்து வருகின்றனர்.

கறவை மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள், புல்கள் செடிகள் ஆகியவை இயற்கையாகவே கிடைப்பதால் விவசாய நிலங்களில் கிடைக்கும் தீவனங்களை பயன்படுத்தி வருகின்றன. கறவை மாடு வளர்ப்பு தொழிலில் உற்பத்தி செய்யப்படும் பால்களை விவசாயிகள் அந்தந்த பகுதியில் இருக்கும் தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் சந்தைப்படுத்துகின்றன. சிறிய அளவில் கறவை மாடுகள் வளர்த்து தொழில் செய்பவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அரசு பால் கொள்முதல் நிலையம் தேனியில் உள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் அரசு பால் கொள்முதல் நிலையத்தில் சந்தைப்படுத்தாமல் தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் சந்தைப்படுத்துகின்றனர்.

ஆண்டிபட்டி தாலுகாவில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. தனியார் பால் கொள்முதல் நிலைய வட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பால்களை அங்குள்ள தனியார் கொள்முதல் நிலையத்தில் சந்தைப்படுத்துகின்றனர். பால் உற்பத்தியாளர்களிடம் பால்களை குறைவான விலைக்கு பெற்றுக்கொண்டு தனியார் நிறுவனம் அந்தப் பால்களை அரசு கொள்முதல் நிலையத்திற்கும் மற்றும் திண்டுக்கல், மதுரை, கேரளா போன்ற பகுதிகளுக்கும் பால்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதுவே தனியார் பால் கொள்முதல் நிலையம் நிர்வாகத்தின் வேலையாக உள்ளது. தனியார் பால் கொள்முதல் நிலையத்தை சேர்ந்தவர்கள் விவசாயிகளுக்கு கறவை மாடு வளர்ப்பதற்காக அதிக வட்டியுடன் கூடிய கடனுதவியும் அளிக்கின்றனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள் பால்களை குறைவான விலைக்கு தனியார் நிறுவனத்திடம் சந்தைப்படுத்துவதுடன் கறவை மாடு வாங்குவதற்கு கடன் உதவி பெற்று பெரும் சிரமத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு பால் கொள்முதல் நிலையம் தேனியில் மட்டுமே அமைந்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் தனியார் கொள்முதல் நிலையத்தை தேடிச் செல்கின்றன. தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் ஒரு லிட்டர் பால் ரூ‌.35 முதல் 38 ரூபாய் வரை உற்பத்தியாளர்களுக்கு தருகின்றனர். ஆனால் அரசு கொள்முதல் நிலையத்தில் உள்ள லிட்டருக்கு ரூ.40 முதல் 45 வரை தருகின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் அரசு பால் கொள்முதல் நிலையம் இல்லாதால் தனியார் பால் கொள்முதல் நிலையத்தை சேர்ந்தவர்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். இவர்களுக்கு கறவை மாடு வாங்குவதற்கு பணமும் கொடுத்து கடனில் தள்ளுகின்றனர்.

எனவே ஆண்டிபட்டி பகுதியில் குளிரூட்டும் மையத்துடன் சேர்த்து அரசு பால் கொள்முதல் நிலையம் அமைத்தால், பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக அரசு கொள்முதல் நிலையத்தில் பாலை விற்பனை செய்ய முடியும். இதனால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பொதுமக்களுக்கும் சுத்தமான கலப்படமில்லாத பால் கிடைக்கும். விவசாயிகள் கறவை மாடு வாங்குவதற்கு கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு வாய்ப்புகள் அமையும். கால்நடை தொழில் பெருகும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேறும், என்றனர்.

The post பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற ஆண்டிபட்டியில் அரசு பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Andipatti ,procurement ,Dinakaran ,
× RELATED ‘பிரிந்த உறவுகள் ஒன்று...