×

சமயப் பொதுவுடைமையாளர் பங்காரு அடிகளார் மறைவால் துயரமுறும் அத்துணை இதயங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் : கவிஞர் வைரமுத்து

சென்னை : பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும் என்று கவிஞர் வைரமுத்து கவிதை பாணியில் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். கடந்த ஓராண்டாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.சில மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ஆதிபராசக்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் பங்காரு அடிகளாரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 82. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் மறைவு செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடக்கிறது.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து கவிதை பாணியில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,

“மய பீடத்தைச்
சமுதாய பீடமாய் மாற்றியவர்

அடித்தட்டு மக்களுக்கு
அடைத்துக் கிடந்த
ஆன்மிகக் கதவுகளை
எளியவர்க்கும் மகளிருக்கும்
திறந்துவிட்டவர்

இறுகிக் கிடந்த
ஆன்மிக முடிச்சுகளைத்
தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர்

சமயப் பொதுவுடைமையாளர்
பங்காரு அடிகளார் மறைவால்
துயரமுறும்
அத்துணை இதயங்களுக்கும்
ஆழ்ந்த இரங்கல்

பீடம் கண்டவரின்
பீடு புகழ்
நீடு நிலவட்டும்,” எனப் பதிவிட்டுள்ளார்.

The post சமயப் பொதுவுடைமையாளர் பங்காரு அடிகளார் மறைவால் துயரமுறும் அத்துணை இதயங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் : கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.

Tags : Bangaru Adikalar ,Poet Vairamuthu ,Chennai ,
× RELATED ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: கவிஞர் வைரமுத்து