தஞ்சாவூர், அக்.20: தஞ்சாவூரில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய செயல்பாட்டை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.10 கோடி செலவில் நவீன ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதை சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆம்னி பேருந்துகளை, புதிய ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கும் வகையில் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தஞ்சாவூரிலிருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 23 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இவை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலை பகுதியிலிருந்து இரவு நேரங்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (நேற்று) முதல் புதிய ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும். இங்கு பயணிகள் வசதிக்காக கழிவறை, ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் பயன்பாட்டுக்காக 13 கடைகள் ஏலம் விடப்பட்டு கடைகள் துவங்கப்பட உள்ளன.
இன்னும் ஒரு வாரத்தில் ஆம்னி பேருந்து நிலையம் முழு செயல்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் பாதுகாப்புக்காக இரவு நேர போலீஸ் பீட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாநகர அமைப்பு அலுவலர் ராஜசேகரன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த், ஆம்னி பேருந்து இயக்குவோர் சங்க நிர்வாகிகள் சேகர், புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post தஞ்சாவூரில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது appeared first on Dinakaran.