×

தமிழ்நாட்டில் அக்.18ம் தேதி மட்டும் பதிவுத்துறையில் ரூ.180 கோடி வருவாய்: பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அக். 18ம் தேதி ஒருநாள் மட்டும் பதிவுத்துறை ரூ.180 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இன்றும் பத்திர பதிவுக்கான கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவிதுள்ளார். இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை: அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் கடந்த அக்.18ம் தேதி அன்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான இன்றும் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்க வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அளித்து, அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் அக்.18ம் தேதி மட்டும் பதிவுத்துறையில் ரூ.180 கோடி வருவாய்: பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Jyoti Nirmalasamy ,Chennai ,Registration Secretary ,Jyoti Nirmalaswamy ,Dinakaran ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...