×

ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு, தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு: எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக): மேல்மருத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் (82) வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சீர்த்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர்.

அவரது இழப்பு பக்தர்களுக்கு பேரிழப்பாகும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்): கடந்த 1985ம் ஆண்டு மரத்தடி ஒன்றின் கீழ், ஓலை குடிசையில் அமர்ந்து, குறி சொல்ல ஆரம்பித்து, படிப்படியாக மக்களிடையே கடவுள் நம்பிக்கை வளர்த்து, ஆன்மீக புரட்சி செய்து, சாதாரண ஏழை, எளிய, பாமர மக்கள் மத்தியில் பெண் தெய்வ வழிபாட்டை வளர்த்தெடுத்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தனது 82வது வயதில் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

* ராமதாஸ்(பாமக நிறுவனர்): பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஏற்படுத்தியவர். அந்த வகையில் ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் பங்காரு அடிகளாருக்கு உண்டு. அவரது மறைவு ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

* அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் மீதும், திமுக தலைவர் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்குத் தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

* மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்: மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அங்குள்ள கோவில் கருவறையில் அனைத்து நாட்களிலும் பெண்கள் பூஜை செய்யலாம் என்ற முறையை அமல்படுத்தி ஆன்மிகப் புரட்சி செய்தவரும், சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளை செய்தவருமான பத்மஸ்ரீ பங்காரு அடிகளாரின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

* ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நல குறைவால் தனது 82வது வயதில் காலமானார். நம் ஆன்மீக பாரத தேசத்திற்கு இது பெரும் இழப்பு. அனைவருக்கும் ஆன்மீக குருவாய் இருந்து, அனைவரது வளர்ச்சிக்கும் குருவாய் வழிகாட்டியவர் பங்காரு அடிகளார்.

* அன்புமணி ராமதாஸ்(பாமக தலைவர்): பங்காரு அடிகளார் மாரடைப்பால் முக்தி அடைந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன் குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரி வேந்தர்,சமக தலைவர் சரத்குமார், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Adiparashakti Peeda ,Bangaru Adikalar ,Chennai ,Tamil Nadu ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...