×

பேரிடர்களின்போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்த இன்று ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை: பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று அறிவிப்பு

சென்னை: பேரிடர்களின்போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை இன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை ஓட்டம் எதிர்வரும் இன்று (20ம் தேதி) நடத்துகிறது.

‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. கடுமையான வானிலை எச்சரிக்கைகள் பொதுப் பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ அமைப்பின் சோதனையினை இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்த உள்ளது. சோதனை காலத்தில், பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கைகள் பெறப்படும். இந்த விழிப்பூட்டல்கள் திட்டமிட்ட சோதனை செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். உண்மையான அவசர நிலையை குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. இதற்கு பொதுமக்கள் எதிர்வினை ஆற்ற வேண்டாம்.

The post பேரிடர்களின்போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்த இன்று ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை: பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…