×

முதல் வெற்றிக்கு பிறகு ஆஸி முதல் தோல்விக்கு பிறகு பாக்: பெங்களூரில் இன்று மோதல்

பெங்களூர்: முதல் வெற்றிக்கு பிறகு ஆஸி அணியும், முதல் தோல்விக்கு பிறகு பாக் அணியும் பெங்களூரில் இன்று நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. ஆஸி தொடங்கும் போது தட்டுதடுமாறினாலும் அதன் பிறகு சமாளித்து சாம்பியன் ஆகிவிடுவது வாடிக்கை. அப்படிதான் இந்த முறையும் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு இலங்கையை சாய்த்த உற்சாகத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையாலான ஆஸி அணி உற்சாகத்துக்கு திரும்பி உள்ளது. முதல் வரிசையில் சொதப்பினாலும் கடைசி வரிசையான வால் ஆடியதால் ஆஸி வென்றது. அதே நேரத்தில் பாக் முதல் 2 ஆட்டங்களில் வெற்றிப் பெற்ற உற்சாகத்துடன் 3வது ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டது.

இந்திய வீரர்களுடன், மோடி அரங்கில் இருந்தவர்களும் சேர்ந்து பாகிஸ்தானை தோற்கடித்தனர். அதனால் உள் நாட்டில் கடும் விமர்சனத்துக்கும், இங்கு பெரும் கேலிக்கும் ஆளாகியுள்ள பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தானுக்கு வெற்றி அவசியம். ஆனால் வீரர்கள் காய்ச்சலால் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு வெற்றியை தொடர பாக் கணக்கு போட்டு வைத்திருக்கிறது. அதே கணக்கில் முதல் வெற்றியை தொடர் வெற்றியாக மாற்றும் ஆசையில் ஆஸி காத்திருக்கிறது. எப்படி இருந்தாலும் யார் கணக்கு கை கொடுக்கப் போகிறதோ, அந்த அணி இன்ற கரை சேருவது நிச்சயம்.

நேருக்கு நேர்…
* சர்வதேச அளத்தில் இந்த 2 அணிகளும் இதுவரை 107 ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில் ஆஸி 69 ஆட்டங்களிலும், பாக் 34 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. மேலும் 3 ஆட்டங்கள் ரத்தாக, ஒரு ஆட்டம் சரிநிகர் சமனில்(டை) முடிந்தது.
* தங்களின் சொந்த நாடுகளில் இல்லாமல் பொதுவான நாடுகளில் களம் கண்ட 36 ஆட்டங்களில் ஆஸி 25லும், பாக் 11லும் வென்றுள்ளன.

கடைசியாக…
* இரு அணிகளும் கடைசியாக தாங்கள் மோதிய 5 ஆட்டங்களில் ஆஸி 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆனால் இந்த 2 அணிகளும் மோதிய கடைசி 2 ஆட்டங்களிலும் பாக் தான் வென்றுள்ளது.
* இந்த அணிகள் மற்ற நாடுகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 வெற்றி, தலா 3 தோல்விகளை சந்தித்துள்ளன.

* உலக கோப்பை போட்டிகளில்…
ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் இவ்விரு அணிகளும் 10முறை மோதிப் பார்த்துள்ளன. அதில் ஆஸி 6, பாக் 4 ஆட்டங்களில் வெற்றியை முத்தமிட்டுள்ளன.

இந்த உலக கோப்பையில்…
* நடப்புத் தொடரில் பாக் முதல் 2 ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை முறையே 81ரன், 6விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து நடந்த 3வது ஆட்டத்தில் இந்தியாவிடம் 7விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
* ஆஸி அணி முதல் 2 ஆட்டங்களில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளிடம் முறையே 6விக்கெட், 134ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இலங்கை உடனான 3வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

சின்னசாமி அரங்கில்..
* பெங்களூர் சின்னசாமி அரங்கில் இதுவரை 26 ஒருநாள் சர்வதேச ஆட்டங்கள் நடந்துள்ளன.
* அவற்றில் 2வது பேட்டிங் செய்த அணி 12 ஆட்டங்களிலும், முதலில் பேட்டிங் செய்த அணி 11 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்துள்ளன. மீதி 3 ஆட்டங்கள் மழையால் ரத்தாகின.
* பெங்களூரில், ஆஸி 10 ஆட்டங்களில் களமிறங்கி, 4 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது. இந்தியா உடனான ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.
* வெற்றிப் பெற்ற ஆட்டங்களில் இந்தியாவை 2 ஆட்டங்களிலும், கனடா, கென்யாவை தலா ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளது.
* பாக் இங்கு விளையாடிய 2 ஆட்டங்களிலும் இந்தியாவை சந்தித்துள்ளது. அவற்றில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றன.

* அணி விவரம்
ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ்(கேப்டன்), அலெக் கேரி, ஜோஷ் இங்லீஸ்(விக்கெட் கீப்பர்கள்), டிராவிஸ ஹெட், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், சீன் அப்போட், கேமரான் கிரீன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்மேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் ஹசல்வுட், ஆஸ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா.

பாகிஸ்தான்: பாபர் அஸம்(கேப்டன்), அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், இப்திகார் அகமது, அகா சல்மான், சவுத் சக்கீல், சதாப் கான், முகமது நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஷாகீன் அப்ரிடி, உஸ்மா மிர்.

The post முதல் வெற்றிக்கு பிறகு ஆஸி முதல் தோல்விக்கு பிறகு பாக்: பெங்களூரில் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Aussies ,Pak ,Bangalore ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...