×

வெள்ளியங்கிரி FPO-க்கு இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய விருது வழங்கி கெளரவிப்பு: விவசாய உறுப்பினர்களுக்கு சத்குரு வாழ்த்து


ஈஷாவின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு, மத்திய விவசாய அமைச்சகத்துடன் இணைந்து தேசிய விருதை வழங்கி கெளரவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று (அக்.18) நடைபெற்ற விழாவில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் செயலாளர் திரு. ஃபயஸ் அகமது கிட்வாய் அவர்கள் இவ்விருதை வழங்கி பாராட்டினார். வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவனத்தின் தலைவரும் தொண்டாமுத்தூர் விவசாயியுமான திரு. குமார் அவர்களும், ஈஷா பிரம்மச்சாரி ஸ்வாமி ரப்யா அவர்களும் விருதை பெற்று கொண்டனர்.

இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இவ்விழாவை இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. இதில் தேசிய அளவிலான ‘Membership Engagement’ என்ற பிரிவில் வெள்ளியங்கிரி FPO-க்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்நிறுவனத்தில் அதிகப்படியான விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களை பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்தி சிறப்பாக செயல்புரிந்து வருவதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதை பெற்றதற்காக அந்நிறுவனத்தில் உள்ள விவசாயிகளுக்கு சத்குரு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்த்துக்கள் வெள்ளியங்கிரி FPO. உங்களுடைய முயற்சிக்கும், வெற்றிக்கும் சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நம் விவசாயிகள் தான் பாரதத்தின் முதுகெலும்பு. நம் தேசத்தில் உள்ள மக்கள் தொகைக்கு நீண்ட கால உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விவசாயிகளின் திறனை பொறுத்தே நம் தேசம் எவ்வளவு வேகமாகவும், எவ்வளவு தூரம் வரை வளர்ச்சி அடையும் என்பதை தீர்மானிக்க முடியும். விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்பை அதிகரிப்பதில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இந்நிறுவனங்களால் விவசாயத்தின் இறுதி நோக்கமான தேசத்தின் உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பை நிறைவு செய்ய முடியும். உங்களுடைய குழு வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலுடன் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தென்னை, பாக்கு, காய்கறி ஆகியவற்றை உற்பத்தி செய்து இடைதரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். இந்நிறுவனம் தேசிய மற்றும் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post வெள்ளியங்கிரி FPO-க்கு இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய விருது வழங்கி கெளரவிப்பு: விவசாய உறுப்பினர்களுக்கு சத்குரு வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Velliangiri FPO ,Sadhguru ,Federation of Indian Industries ,Union Ministry of Agriculture for ,Velliangiri Plowman Producer Company ,Isha ,Dinakaran ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்