×

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை எதிரொலி; ஆம்னி பஸ்களை பர்மிட் இன்றி இயக்கினால் பறிமுதல்: வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூர்: ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பஸ்களை பர்மிட் இன்றி இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் வரும் 23ம் தேதி ஆயுதபூஜையும், 24ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு முன்பு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர் விடுமுறையை கொண்டாட பலர் திட்டமிட்டுள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு ஏற்கனவே ரயில்களில் முன்பதிவு டிக்கெட் பல நாட்களுக்கு முன்பே விற்று தீர்ந்துவிட்டது. அதேபோல் அரசு விரைவு பஸ்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ்சை தேர்வு செய்கின்றனர்.

இதையொட்டி கடந்த சில நாட்களாக பயணிகள் பலர் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும், இதைதவிர அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அவ்வப்போது புகார் எழுகிறது. 4 நாட்கள் விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்க ளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆகிய 3 மாவட்டங்களின் வழியாக ஆம்னி பஸ்கள் செல்கின்றன. இதில் வேலூரிலிருந்து மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் ஆந்திராவுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. இந்த பஸ்களில் நாளை 20ம் தேதி இரவு முதல் 25ம் தேதி இரவு வரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குழு அமைத்து ஆய்வு செய்யப்படுகிறது.

இக்குழுவினர் வாலாஜா, பள்ளிக்ெகாண்டா, வணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்னி பஸ்கள் ஆய்வு பணியில் ஈடுபடுவார்கள். ஆய்வில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பர்மிட் இல்லாமல் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை எதிரொலி; ஆம்னி பஸ்களை பர்மிட் இன்றி இயக்கினால் பறிமுதல்: வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Regional Transport Department ,Vellore ,Amni ,Ayudhpuja ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...