×

பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக இருப்பதால் சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய பாஜ அரசு முடக்கப் பார்க்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு


சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் அகில இந்தியப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் பிரதிநிதித்துவம் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் காட்டும் சில திடுக்கிடும் புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன. மாநிலங்களவையில், பதில் அளித்த ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 15.92 சதவிகிதமும், எஸ்சி பிரிவினருக்கு 7.65 சதவிகிதமும் எஸ்டி பிரிவினருக்கு 3.80 சதவிகிதமும் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஐஏஎஸ். பணிக்கு மொத்தம் 2,163 பேரும், ஐபிஎஸ். பணிக்கு 1,403 பேரும் இந்திய வன பணிக்கு 799 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 334 எஸ்சி பிரிவினரும், 166 எஸ்டி பிரிவினரும், 695 பிற பின்தங்கிய சமுதாயத்தினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று பதில் அளித்தார். இந்த குறைவான பிரதிநிதித்துவம் சாதி அடிப்படையிலான மோசமான பாகுபாட்டை காட்டுகிறது. இந்த பாகுபாடு அவர்களை சமுதாயத்தில் உயர்வதைத் தடுக்கிறது. பிற பின்தங்கிய சமுதாயத்தினருக்கு அவர்களுக்கான உரிமையை வழங்காவிட்டால் சமூக நீதி கனவு நிறைவேறாது.

அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவதன் மூலமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும். இதற்கு ஒரே வழி, ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதி வாரி கணக்கெடுப்பு மட்டுமே. பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பாஜ அரசு இருப்பதால் தான், சாதிவாரி கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள். மகளிர் இடஒதுக்கீடு கூட முழு மனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலை வாக்கு வங்கி அரசியலை கணக்கில் கொண்டு, கண்துடைப்புக்காக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் கழித்து தான் அமலுக்கு வரும் என்று ஒன்றிய பாஜ அரசு அறிவித்திருப்பது இந்த ஏமாற்று வேலைக்கு சிறந்த சான்று. பாஜக என்றைக்குமே உயர் சாதியினர் ஆதரவு அமைப்பாகவே இருந்திருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக இருப்பதால் சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய பாஜ அரசு முடக்கப் பார்க்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union Government of Bahia ,K. S. ,Chennai ,Tamil Nadu Congress ,President ,Akhagiri ,Union Baha government ,
× RELATED ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி