×

ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி; ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை


சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையையடுத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வார இறுதியில் சனி, ஞாயிறு விடுமுறையுடன் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகம் செல்வர். மேலும் தொடர் விடுமுறை வருவதால் பலர் சுற்றுலா செல்ல வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வர். அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வதன் காரணமாக தமிழக அரசு பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் நாளை, நாளை மறுநாள் மற்றும் 22ம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு 2,265 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர், பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1,700 பேருந்துகளும் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக பேருந்து, ரயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பியுள்ளது. அரசு விரைவு பேருந்துகளிலும் அனைத்து இடங்களும் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. குறிப்பாக 20, 21 மற்றும் 24ம் தேதிகளில் இடங்கள் இல்லை.

பிற போக்குவரத்து கழக பேருந்துகளிலும் விறுவிறுப்புடன் முன்பதிவு நடைபெறுகிறது. சென்னையில் இருந்து 20, 21, 22 மற்றும் வெளியூர்களுக்கு சென்னை திரும்ப 24, 25ம் தேதிகளில் பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ளன. ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் கடைசியாக செல்வது ஆம்னி பேருந்துகள் தான். ஆனால் பொதுமக்களின் தேவையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளதுள்ளனர். அதே போல தற்போது ஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏ.சி. வசதி இல்லாத சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு இரண்டு மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். வழக்கமாக ரூ.600க்கு விற்கப்படும் டிக்கெட் ரூ.1300 முதல் ரூ.1,700 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி.வசதியுடன் சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு வழக்கமாக ரூ.900க்கும், ரூ.1,500க்கும் விற்கப்படும் டிக்கெட் ரூ.1,800 முதல் ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கோவை, சேலம், திருப்பூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏ.சி. வசதி இல்லாத சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணங்களில் இருந்து ரூ.500 முதல் ரூ.1,500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி இல்லாத சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு வழக்கமாக ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. வசதியுடன் சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்தில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது.

இந்த அதிகப்படியான கட்டண உயர்வு பயணிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. தமிழக போக்குவரத்து துறை தரப்பில் அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தி முறைகேடுகளில் ஈடுபடும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ஆம்னி பேருந்துகள் விடுமுறை காலங்களில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவது தொடர்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி; ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ayudha Puja ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…