×

சதுரகிரி கோயிலில் 3 நாள் தங்கி விழா நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: சதுரகிரி மலை சுந்தர மகாலிங்க கோயிலில் 3 நாள் தங்கி விழா நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கோயிலில் பக்தர்கள் 3 நாள் தங்கி நவராத்திரி திருவிழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை அமைந்துள்ளது. ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா, சுந்தரபாண்டியம் ஏழூர் சாலியர் சமூகத்தின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா வரும் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

சதுரகிரி மலை, மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக வனத்துறை கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கும், ஆடு, கோழிபலியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் 10 நாள் திருவிழாவிற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும், கடைசி 3 நாட்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அப்பகுதிமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வனத்துறையினர் பக்தர்கள் 10 நாட்கள் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளது. மேலும் கடைசி 3 நாட்கள் மட்டுமே அனுமதி எனவும் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து கோயிலில் பக்தர்கள் 3 நாள் தங்கி நவராத்திரி திருவிழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது சதுரகிரி மலை சுந்தர மகாலிங்க கோயிலில் 3 நாள் தங்கி விழா நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

The post சதுரகிரி கோயிலில் 3 நாள் தங்கி விழா நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chathuragiri temple ,Madurai ,High Court ,Chathuragiri hill Sundara Mahalinga temple ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...