×

மீத்தா ரகுநாத் ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில்நாயகியாக அறிமுகமானவர் மீத்தா ரகுநாத். தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்ட இவர், சமீபத்தில் வெளியான குட்நைட் படத்தின் மூலம், மீண்டும் தனது முத்திரையை பதித்திருக்கிறார். மீத்தா தனது ஃபிட்னெஸ் ரகசியங்கள் குறித்து பகிர்ந்துகொள்கிறார்:

நான் பிறந்தது, வளர்ந்து எல்லாம் ஊட்டியில்தான். ஊட்டியில் வாழும் மலைவாழ் மக்களான படுகர் இனத்தைச் சேர்ந்தவள் நான். பள்ளிப் படிப்பெல்லாம் ஊட்டியில் முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்பை கோயம்புத்தூரில் கற்றேன். சிறுவயது முதலே கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால், சென்னை வந்தால் என் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சென்னை வந்தேன். அப்போது, கெளதம் வாசுதேவ் மேனன் சார், தனது முகநூலில் அடுத்த படத்திற்கான நடிகையை தேர்வு செய்யும் ஆடிஷன் குறித்து பதிவிட்டிருந்தார். யதார்த்தமாக, அந்த ஆடிஷனுக்கு விண்ணப்பித்தேன். மூன்றுகட்ட சோதனைகளுக்கு பிறகு, அதில் செலக்ட் ஆக, தற்போது நடிகையாகிவிட்டேன். சமீபத்தில் வெளியான குட் நைட் படத்தில் எனது கேரக்டருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஓர்க்கவுட்ஸ்: ஃபிட்னெஸ் என்ற சொல் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. நடிகையாகும் வரை ஃபிட்னெஸ் பற்றி எல்லாம் யோசித்ததில்லை. இப்போதும் கூட எனக்கு ஃபிட்னெஸ் பற்றி பெரிதாக விழிப்புணர்வு இல்லை. இன்னும் ஒரு சில படங்கள் நடித்த பிறகு ஃபிட்னெஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பேனோ என்னவோ தெரிய வில்லை. எனென்றால், என்னை பொருத்தவரை ஜிம்முக்குப் போய் பயங்கரமா ஓர்க்கவுட்ஸ் எல்லாம் செய்தால்தான் ஃபிட்டாக இருக்க முடியும் என்பது இல்லை.

முடிந்தளவு காலை எழுந்ததும், சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வது, முடிந்தளவு பக்கத்தில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வது, தினமும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது போன்றவற்றை கடைப்பிடித்தாலே நாம் ஃபிட்டாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். இது தவிர, சமீபகாலமாக, என்னுடைய தினசரி பயிற்சிகளில் யோகாவிற்கும் இடம் அளிக்க தொடங்கிவிட்டேன். இப்பொதெல்லாம் உடற்பயிற்சி செய்வதை தவறினாலும், தினசரி யோகா செய்வதை தவறவிடுவதில்லை. அதுபோன்று, பெரும்பாலும் மாலை நேரத்தைதான் யோகா பயிற்சிக்கு ஒதுக்குவேன் இதுதான் எனது தினசரி பயிற்சிகள்.

டயட்: என்னை பொறுத்தவரை, டயட்டில் பெரிய நம்பிக்கை இல்லை. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலே, அதைவிட பெரிய டயட் வேறெதுவும் இல்லை. பொதுவாக, நமது முன்னோர்களின் ஜீன்தான் நமக்கும் வழிவழியாக வரும். எனவே, அதையொட்டியே நமது உணவுமுறையை அமைத்துக் கொண்டாலே டயட் என்று தனியாக கடைப்பிடிக்க வேண்டிய தேவை இல்லை. எனக்கு பிடித்த உணவு என்றால் இட்லி மற்றும் தக்காளி சட்னிதான். எனது காலை உணவில் பெரும்பாலும், இட்லி, தோசை தக்காளி சட்னி கண்டிப்பாக, இருக்கும். மற்றபடி டயட் என்ற பெயரில், பிடித்ததைகூட சாப்பிடாமல் வருத்திக் கொள்ளும் டயட் எல்லாம் இருப்பது கிடையாது.

பியூட்டி: கடவுள் புண்ணியத்தில் எனது சருமம் மென்மையாகவே அமைந்துள்ளது. பெரிய அளவில் ஸ்கின் கேர் எல்லாம் செய்வதில்லை நான். தினமும் டவ் சோப்பைதான் முகத்துக்கு பயன்படுத்துவேன். வீட்டில் இருந்தாலும் சரி, சூட்டிங்கிற்காக, வெளியில் இருந்தாலும் சரி, தினமும் இரண்டு வேளை முகத்தை கழுவிவிடுவேன். அதுபோல், வெளியே செல்லும்போது, மாய்ச்சுரைஸர் போட்டுக் கொள்வேன். இது தவிர, வாரத்தில் ஒருநாள் முகத்திற்கு கடலைமாவு தயிர் போடுவேன் அவ்வளவுதான்.

என்னை பார்ப்பவர்கள் பெரும்பாலும் தலைமுடியை எப்படி மெயின்டெயின் பண்றீங்கன்னுதான் கேட்கிறார்கள். எனது சுருட்ட முடி பலருக்கும் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள். தலைமுடிக்கு என்ன கேர் கொடுக்குறீங்கன்னு கேக்குறாங்க. தலைமுடிக்கு என்று தனித்துவமான கவனிப்பு எதுவும் கிடையாது. தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறேன். அவ்வப்போது கற்றாழை ஜெல் பயன்படுத்துவேன் அவ்வளவுதான். பொதுவாக, கெமிக்கல் நிறைந்த ஸ்கின் கேர் தயாரிப்புகளை தவிர்த்துவிட்டு, இயற்கையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலே, நமது சருமம் பொலிவுடன் இருக்கும். என்னைப் பொருத்தவரை அழகு என்றால், அது மனசுதான். மனசு அழகாக இருந்தால் முகமும் சருமமும் பொலிவுடன் இருக்கும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post மீத்தா ரகுநாத் ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Raghunath ,Kumkum ,Dr. ,Darbukha Siva ,
× RELATED டூர் போறீங்களா?