×

தங்க நகைச்சீட்டு மோசடி விவகாரம்!: வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்.. பிரணவ் ஜுவல்லர்ஸ் அதிபர் மதன் வீடியோ வெளியீடு..!!

சென்னை: தங்க நகைச்சீட்டு மோசடி விவகாரத்தில் மதுரை மற்றும் திருச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பிரணவ் ஜுவல்லர்ஸ் அதிபர் மதன் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம் என விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். பழைய நகையை டெபாசிட் செய்தால் ஒரு வருடம் கழித்து அதே எடையுள்ள புதிய நகையை தருவதாகக் கூறியும், நகை டெபாசிட் செய்யப்படும் காலத்தில் 9% வட்டி, 3 கிராம் தங்கக் காசு தருவதாகக் கூறியும் பிரணவ் ஜுவல்லரி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

நகையை டெபாசிட் செய்து ஒரு வருடம் கழித்து புதிய நகை கேட்டபோது தராமல் ஏமாற்றியதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறினர். திருச்சி, மதுரையில் உள்ள பிரணவ் ஜுவல்லரி கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். திடீரென நகைக் கடையை மூடிவிட்டு தலைமறைவான கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நிதி மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர், அவரது மனைவி, ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம் என பிரணவ் ஜுவல்லர்ஸ் அதிபர் மதன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், ரூ.100 கோடி முதிர்வுத்தொகையுடன் ஓட்டம் என்று வெளியான செய்தி வதந்தி. எங்கள் நிறுவனத்திடம் ஏராளமான அசையா சொத்துக்கள் உள்ளது. எனவே எல்லா வாடிக்கையாளர்களுக்கும் முறையாக முதிர்வுதொகையை தர தயாராக உள்ளோம். நாங்கள் எங்கும் ஓடவும் இல்லை; ஒளியவும் இல்லை. குறிப்பிட்ட தேதியில் முதிர்வுதொகையை கொடுத்துவிடுவோம்.

இது தொடர்பாக காவல்துறையிடம் உரிய விளக்கம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளாக நகை சேமிப்பு திட்டத்தை நடத்தி வருகிறோம். இதில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர். எனவே வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம் என்றும் பிரணவ் ஜுவல்லர்ஸ் அதிபர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு சில நாட்களில் கடைகளை திறந்து வியாபாரம் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

The post தங்க நகைச்சீட்டு மோசடி விவகாரம்!: வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்.. பிரணவ் ஜுவல்லர்ஸ் அதிபர் மதன் வீடியோ வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Pranav Jewelers ,Madan ,Chennai ,Madurai ,Trichy ,Dinakaran ,
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்