×

பள்ளி, பெண்கள் தங்கும் விடுதியில் தலைமை செயலாளர் திடீர் ஆய்வு

கூடுவாஞ்சேரி, அக்.19: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில் இயங்கி வரும் தோழி பெண்களுக்கான தங்கும் விடுதிக்கு, அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று காலை 8 மணி அளவில் திடீரென வந்தார். பின்னர், விடுதி வளாகம், சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, அங்கிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை டம்ளரில் பிடித்து குடித்து பார்த்தார். அப்போது, விடுதியின் வார்டன் மற்றும் விடுதியில் தங்கியிருந்த மதுரை, திருச்சி, சேலம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகள் மற்றும் தங்கி வேலை செய்யும் இளம் பெண்களிடம் அரசு தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அவரிடம் மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் கூறுகையில், ‘இங்கு உணவு வசதியை தவிர மற்ற அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளது. இதில், உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கூறினர். அதற்கு தலைமை செயலாளர் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளம் பெண்களிடம் உறுதி அளித்தார். மேலும், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, துணை தலைவர் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் தாமோதரன் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
மேலும், மறைமலை நகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆய்வு செய்து வரும் நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு மகளிர் விடுதியில் நேற்று காலை திடீரென வந்து ஆய்வு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு: மறைமலைநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று, காலை உணவு திட்டத்தை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் அமர்ந்து, காலை உணவை ருசிபார்த்து ஆய்வு செய்தனர். பின்னர், அங்கு மாணவர்களுக்கு தரமான காலை உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மறைமலைநகர் நகரமன்றத் தலைவர் ஜெ.சண்முகம், ஆணையர் சௌந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளி, பெண்கள் தங்கும் விடுதியில் தலைமை செயலாளர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Guduvanchery ,Chengalpattu district ,Guduvancheri ,Nellikuppam ,Govt Girls High School ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...