×

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை, அக்.19: திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதைத்தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளன்று மகா தேரோட்டம் நடைபெறும். விழாவின் நிறைவாக, 26ம் தேதி 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கும், அதிகபட்சம் 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முன்கூட்டியே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள குறித்த ஆலோசனைக் கூட்டம், அண்ணாமலையார் கோயில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

அதில், எஸ்பி கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் ரிஷப், அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், கோயில் இணை ஆணையர் ஜோதி அப்போது, துறைவாரியாக தீபத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். குறிப்பாக, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டும், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்றார். மேலும், தீபத்திருவிழாவை அகன்ற திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யவும், அதற்காக கோயில் உள் பிரகாரம் மற்றும் மாட வீதி உள்ளிட்ட இடங்களில் 16 எல்இடி திரைகள் அமைக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கிரிவலப்பாதையில கூடுதல் மின் விளக்குகள், 26 இடங்களில் மினி குடிநீர் தொட்டிகள் அமைத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், 60க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பறை வசதிகள், கூடுதலாக நடமாடும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கூடுதலான தூய்மைப் பணியாளர்களை நியமித்து, தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தூய்மைப்பணியை தடையின்றி மேற்கொள்ளவும், தற்காலிக பஸ் நிலையங்கள், கிரிவலப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் குவியும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். சுகாதார பணிக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும், தீபத்திருவிழா பாதுகாப்புக்காக கூடுதலாக இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தவும், கோயில் நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தி கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Collector Murugesh ,Tiruvannamalai Karthikai Deepatri ,Vijala ,Tiruvannamalai ,Tiruvannamalai Annalaiyar temple ,Karthik Dheetri festival ,Thiruvannamalai Karthik Dheetri festival ,
× RELATED கைலாச வாகனத்தில் அண்ணாமலையார் பவனி...